ADDED : ஜன 02, 2024 06:44 AM

பெங்களூரு: கட்சி தலைவர்களை வாய்க்கு வந்தபடி வசைபாடும், மூத்த எம்.எல்.ஏ., பசனகவுடா எத்னாலை, டில்லிக்கு வரவழைத்து சமாதானம் செய்ய, பா.ஜ., மேலிடம் ஆலோசிக்கிறது.
விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உட்பட, பல தலைவர்கள் மீது தனிப்பட்ட முறையில் அதிருப்தி உள்ளது.
இதற்கு முன் பா.ஜ., அரசு இருந்த போது, அமைச்சர் பதவி எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை. அப்போதே எரிச்சலில் இருந்தார்.
இம்முறை எதிர்க்கட்சி தலைவர் அல்லது மாநில பா.ஜ., தலைவர் பதவி கிடைக்கும் என, மிகவும் எதிர்பார்த்தார். ஆனால் எந்த பதவியும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தார்.
இதனால் கோபத்தில் எடியூரப்பா, விஜயேந்திரா உட்பட, மற்ற தலைவர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கிறார். இது கட்சிக்கும், தலைவர்களுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு முறை பா.ஜ.,வை விட்டு சென்ற எத்னாலை, மீண்டும் கட்சியில் சேர்க்க அன்றைய மாநில தலைவர் சதானந்த கவுடா ஆட்சேபம் தெரிவித்திருந்தார். 'எத்னாலை கட்சியில் சேர்ப்பதில், எந்த பயனும் இல்லை.
இவர் கட்சியை பாழாக்குவார்' என எச்சரித்தார். ஆனால் இதை பொருட்படுத்தாத எடியூரப்பா, பிடிவாதம் பிடித்து எத்னாலை சேர்த்தார். இப்போது எடியூரப்பாவை பற்றியே, அவமதிப்பாக பேசுகிறார்.
அது மட்டுமின்றி, 'கொரோனா நேரத்தில் 40,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. என்னை கட்சியில் இருந்து நீக்கினால், அனைத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன்' என்றும் மிரட்டுகிறார். இவர் மீது நடவடிக்கை எடுத்து, கட்சியில் இருந்து நீக்கும்படி பலரும் வலியுறுத்துகின்றனர்.
மூத்த தலைவரான அவரை, கட்சியில் இருந்து நீக்குவதை விட, சமாதானம் செய்வது நல்லது என, பா.ஜ., மேலிடம் கருதுகிறது. வடக்கு பகுதியின் பல மாவட்டங்களில், எத்னாலுக்கு தனி செல்வாக்கு உள்ளது.
தீவிர ஹிந்துத்வாவாதியான அவர் மீது, நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே அவரை டில்லிக்கு வரவழைத்து, அவரது பிரச்னைகளை கேட்டறிந்து, சமாதானம் செய்து அனுப்ப மேலிடம் ஆலோசிக்கிறது.

