கர்நாடக முதல்வருக்கு சூனியம்: துணை முதல்வர் பகீர் தகவல்
கர்நாடக முதல்வருக்கு சூனியம்: துணை முதல்வர் பகீர் தகவல்
ADDED : மே 31, 2024 03:00 PM

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு எதிராக அரசியல் எதிரிகள் சிலர் சூனியம் வைத்துள்ளதாக துணை முதல்வர் சிவக்குமார் பகீர் தகவல் தெரிவித்துள்ளார். இதற்காக கேரளாவில் உள்ள ஒரு கோயிலில் அகோரிகள் மூலம் சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக உள்ளார். இங்கு காங்கிரஸ் ஆட்சி விரைவில் கவிழும் என பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு எதிராக அரசியல் எதிரிகள் சிலர் சூனியம் வைத்துள்ளதாக துணை முதல்வர் சிவக்குமார் பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிவக்குமார் கூறியிருப்பதாவது: முதல்வர் சித்தராமையா, நான் உள்ளிட்டோருக்கு எதிராகவும், காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் சிலர் 'சத்ரு பைரவி' யாகம் நடத்துகின்றனர். கேரளாவின் ராஜராஜேஸ்வரி கோயிலில்தான் இந்த யாகம் நடத்தப்பட்டது. இதை யார் நடத்தியது? எதற்காக நடத்தினர்? யார் யார் இந்த யாகத்தில் பங்கேற்றனர்? என்பது எல்லாம் எனக்கும் தெரியும். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை ஒழித்துக் கட்டவே இந்த யாகம் நடத்தப்பட்டது.
கடவுளின் ஆசி
மொத்தம் 21 வெள்ளாடுகள், 3 எருமை மாடுகள், 21 செம்மறி ஆடுகள், 5 பன்றிகளை பலியிட்டு இந்த யாகம் நடத்தப்பட்டது. இதனை அகோரிகளே நடத்தி இருக்கின்றனர். பில்லி சூனியம், யாகம் நடத்துகிறவர்கள் நடத்தி சதி செய்துள்ளனர். எங்களுக்கு கடவுளின் துணை இருக்கிறது. எங்களுக்கு கடவுளின் ஆசி இருக்கிறது. எனக்கு கடவுளின் பாதுகாப்பு இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். டி.கே.சிவக்குமாரின் இந்த குற்றச்சாட்டால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.