பழிக்குப்பழி...? ஓநாய் தாக்குதலின் திகில் பின்னணி; உ.பி., அதிகாரி அதிர்ச்சி தகவல்
பழிக்குப்பழி...? ஓநாய் தாக்குதலின் திகில் பின்னணி; உ.பி., அதிகாரி அதிர்ச்சி தகவல்
ADDED : செப் 06, 2024 08:34 AM

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மக்களை வேட்டையாடும் ஓநாய்களின் தாக்குதல் குறித்து வனத்துறையினர் வெளியிட்ட தகவல், அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அச்சுறுத்தல்
உ.பி.,யின் பஹ்ரைச் மாவட்டத்தில், சமீப காலமாக ஓநாய்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள 35 கிராமங்களில் மக்கள் பீதியில் உள்ளனர். ஓநாய்கள் தாக்குதலில் கடந்த இரு மாதங்களில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பரேஷன் பேடியா
இதையடுத்து, ஓநாய்களை பிடிக்க, 'ஆப்பரேஷன் பேடியா' என்ற பெயரில் அதிரடி தேடுதல் வேட்டை நடக்கிறது. இதுவரை நான்கு ஓநாய்கள் பிடிபட்ட நிலையில், மீதமுள்ளவற்றை பிடிக்க வனத்துறையினர் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.
வங்கு
இதனிடையே, பஹ்ரைச் மாவட்டத்தின் ராமப்பூர் கிராம கரும்புக்காட்டில் உள்ள 2 அடி ஆழமுள்ள வங்கில் 2 ஓநாய் குட்டிகள் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டன. கனமழை காரணமாக, வங்கு தண்ணீரில் மூழ்கியதில் குட்டிகள் செத்துப்போய் விட்டன.
பழிக்குப்பழி
இதனால், தவித்துப் போன தாய் ஓநாய்கள், தங்களின் குட்டிகளும், இருப்பிடமும் பறிபோனதற்கு மனிதர்களே காரணம் என்று நினைத்து, பழிவாங்கும் நோக்கில் மக்களை வேட்டையாடி வருவதாக உ.பி., வனத்துறை அதிகாரி சஞ்சய் பதக் தெரிவித்துள்ளார். இது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
'ஓநாய்களுக்கு பழி வாங்கும் குணம் உண்டு. தங்களுக்கு இன்னல் விளைவிப்பவர்களை அவை பழிவாங்கும் குணம் கொண்டவை. தற்போதைய சம்பவங்களின் பின்னணியில் அது போன்ற காரணமும் இருக்கலாம்' என்று அவர் கூறியுள்ளார்.
அச்சுறுத்தி வரும் ஓநாய்களை வனத்துறையினர் விரைந்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.