போலீசுக்கு பளார்: பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு சிக்கல்
போலீசுக்கு பளார்: பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு சிக்கல்
ADDED : ஜன 07, 2024 12:02 AM

புனே, மஹாராஷ்டிராவில், அரசு விழா மேடையில் போலீஸ்காரரின் கன்னத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில் காம்ப்ளே அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ., - சிவசேனா, தேசியவாத காங்., கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள புனே சஸ்சூன் அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் திருநங்கையருக்கான பிரத்யேக வார்டு துவங்கப்பட்டது.
துணை முதல்வர் அஜித் பவார், மாநில கல்வி அமைச்சர் ஹசன் முஸ்ரிப் ஆகியோர் இந்த வார்டை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் புனே கன்டோன்மென்ட் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில் காம்ப்ளேவும் பங்கேற்றார்.
அவரது பெயர் நிகழ்ச்சி பேனரிலும், நிகழ்ச்சி நிரலிலும் இடம்பெறவில்லை. இதனால் அவர் நிகழ்ச்சி முடியும் முன் மேடையிலிருந்து இறங்கி சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது இறங்கும் வழியில் நின்றிருந்த போலீஸ்காரர் ஒருவர், அவர் மீது கை வைத்த சமயத்தில், சுனில் காம்ப்ளே கால் இடறி விழச் சென்றார். உடனே ஆத்திரத்தில் அந்த போலீஸ்காரரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால், அந்த போலீஸ்காரர் செய்வதறியாது திகைத்தார்.
இதன் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் பரவியது; இது, எம்.எல்.ஏ.,வுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பேசிய சுனில் காம்ப்ளே, ''யாரையும் நான் அடிக்கவில்லை; வழியை மறித்து நின்றிருந்தவரை தள்ளி விட்டேன்,'' என்றார்.