பெட்ரோலில் எத்தனால் கலப்பது மைலேஜை பாதிக்காது: வாகன தயாரிப்பாளர்கள் உறுதி
பெட்ரோலில் எத்தனால் கலப்பது மைலேஜை பாதிக்காது: வாகன தயாரிப்பாளர்கள் உறுதி
ADDED : ஆக 31, 2025 10:01 AM

புதுடில்லி: பெட்ரோலில் எத்தனால் கலப்பது, வாகனங்களில் மைலேஜை பாதிக்காது என தொழில்துறை அமைப்புகள், வாகன தயாரிப்பாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால், வாகனங்களின் மைலேஜ் குறையும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இத்தகைய தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. எத்தனால் கலப்பதால் வாகன எரிபொருள் மைலேஜை பாதிக்காது என தொழில்துறை அமைப்புகள் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனத்தினர் உறுதி அளித்துள்ளனர்.
இது குறித்து தொழில்துறை அமைப்பினர் கூறியதாவது: பெட்ரோலில், எத்தனால் கலப்பது, சுற்றுச்சூழல் ரீதியாக மிகப்பெரிய பலனை அளிக்கின்றன. எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதில் வாகனத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அதை சரி செய்து தருவதற்கு
கார் தயாரிப்பாளர்கள் வாரண்டி அளித்துள்ளனர். பழைய வாகனமாக இருந்தாலும் இந்த வாரண்டி செல்லும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாதிப்பில்லை!
'' 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் எந்த வாகனங்களும் பழுதடைந்ததாக எந்த புகாரும் இல்லை. வாகன எஞ்சின்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது'' என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் பிரசாந்த் பானர்ஜி உறுதி செய்தார்.
எந்த பாதிப்பும்…!
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் விக்ரம் குலாட்டி கூறியதாவது: எத்தனால் கலந்த பெட்ரோல் வாகனங்களில் மைலேஜை பாதிக்கும் என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இதுவரை, எந்த அறிவியல் ஆய்வறிக்கையோ, அறிவியல் நிபுணர்களோ எத்தனால் கலந்த பெட்ரோல் மிகவும் ஆபத்து என்று ஆய்வில் உறுதி செய்யவில்லை.
இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன், இந்தியன் பெட்ரோலியம் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து நடத்திய சோதனைகளிலும் எந்த பாதிப்பும் உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
CO2 உமிழ்வு
இந்திய பெட்ரோலிய தொழில் கூட்டமைப்பின் ஆலோசகர் ரவி கூறியதாவது: பெட்ரோலில் எத்தனால் கலப்பது கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க உதவுகிறது என்பதை ஒப்புக்கொண்டார்.
''சுற்றுச்சூழல் நன்மைகளை பொறுத்தவரை, கரும்புகளிலிருந்து மட்டுமல்ல, உபரி அரிசி, சோளம், சேதமடைந்த உணவு தானியங்களில் இருந்து எத்தனால் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது எத்தனால் கலப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானது'' என வாகன உற்பத்தியாளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எத்தனால் கலப்பு என்பது என்ன?
எத்தனால் என்பது புதுப்பித்தக்க உயிரி எரிபொருள்; இதை பெட்ரோலில் கலப்பதன் மூலம் காற்று மாசு குறைகிறது. சர்வதேச தர அடிப்படையில் இது செய்யப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு 5 ஆண்டுகள் முன்னதாகவே இந்த எத்தனால் கலப்பை இந்தியா செய்து சாதனை படைத்துள்ளது.

