'லிப்டு'க்குள் நாய்: எதிர்த்த சிறுவனுக்கு 'பளார்'
'லிப்டு'க்குள் நாய்: எதிர்த்த சிறுவனுக்கு 'பளார்'
UPDATED : பிப் 21, 2025 05:20 AM
ADDED : பிப் 21, 2025 01:05 AM

நொய்டா: 'லிப்டு'க்குள் நாயுடன் சென்றதை எதிர்த்த சிறுவனின் கன்னத்தில் அறைந்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
தலைநகர் டில்லி அருகில் உள்ள நொய்டா, உ.பி.,யின் கவுதம புத்தா நகர் மாவட்டத்துக்கு உட்பட்டது. இங்குள்ள கிரேட்டர் நொய்டாவின் அடுக்குமாடி குடியிருப்பில், வளர்ப்பு நாயை லிப்டுக்குள் அழைத்துச் சென்ற தகராறில் 8 வயது சிறுவனை, ஒரு பெண் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
இது பற்றி போலீசார் கூறியதாவது: கிரேட்டர் நொய்டாவில் கவுரி சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், 8 வயது சிறுவன், 'டியூஷன்' முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக லிப்டில் ஏறினான். அப்போது, முதல் மாடியில் வசிக்கும் பெண், கயிறு எதுவும் கட்டப்படாத நிலையில், தன் வளர்ப்பு நாயுடன் லிப்டில் ஏறினார்.
அதற்கு சிறுவன் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண், சிறுவனை சரமாரியாக அடித்து, லிப்டில் இருந்து வெளியே தள்ளி விட்டார். படிக்கட்டில் அழுது கொண்டிருந்த சிறுவனிடம் அங்குள்ளவர்கள் விசாரித்தபோது, நடந்த சம்பவம் தெரிந்தது.
கண்காணிப்பு கேமரா மூலமாக உண்மை தெரிந்ததும், அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.
இதற்கிடையே, வளர்ப்பு நாய் பிரச்னையால் அந்த பெண் மீது பல புகார்கள் ஏற்கனவே நிலுவையில் இருந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என, அங்குள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நொய்டா, கிரேட்டர் நொய்டா, மத்திய நொய்டா பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள நிலையில், வளர்ப்பு பிராணிகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் குவிவதால் போலீசார் திகைத்துள்ளனர்.