ப்ளூ ப்ரின்ட் எப்போது... பீஹாரில் ஆட்சியமைப்பது குறித்து சிராக் பாஸ்வான் சொன்ன தகவல்
ப்ளூ ப்ரின்ட் எப்போது... பீஹாரில் ஆட்சியமைப்பது குறித்து சிராக் பாஸ்வான் சொன்ன தகவல்
UPDATED : நவ 16, 2025 06:18 PM
ADDED : நவ 16, 2025 06:04 PM

பாட்னா: பீஹாரில் புது அரசை அமைப்பதற்கான ப்ளூ ப்ரின்ட் இன்றோ அல்லது நாளையோ தயாராகி விடும் என்று மத்திய அமைச்சரும், லோக் ஜன்சக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பாஜ 89 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சிராக் பாஸ்வானின் லோக் ஜன்சக்தி 19 இடங்களை வென்றுள்ளது.
நிதிஷ் குமார் தலைமையிலான தற்போதைய அரசின் பதவிக்காலம் வரும் நவ.,22ம் தேதி வரை உள்ளது. எனவே, அதற்கு முன்பாக, புதிய அரசு பொறுப்பேற்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், பீஹாரில் புதிய அரசு அமைப்பது குறித்து மத்திய அமைச்சரும், லோக் ஜன்சக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் சில தகவல்களை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது; பீஹாரில் புதிய அரசை அமைப்பது தொடர்பாக மூத்த மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். இன்றோ அல்லது நாளையோ அதற்கான ப்ளூ பிரின்ட் தயாராகி விடும். நவ.,22ம் தேதிக்கு முன்பாக புதிய அரசு பொறுப்பேற்று விடும், இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, நிதிஷ்குமார் 10வது முறையாக முதல்வராக பதவியேற்பு விழா மிக பிரமாண்டமாக நடைபெறும் என்று ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. மேலும், பிரதமர் மோடியும், பாஜ மூத்த தலைவர்கள் பங்கேற்கும் விதமாக, தேதி முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
புதிய அரசை அமைப்பது குறித்து தேஜ கூட்டணி எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை அல்லது நாளை மறுதினம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

