காய்கறி கடையில் பில் போட பி.எம்.டி.சி., பஸ் டிக்கெட் ரோல்
காய்கறி கடையில் பில் போட பி.எம்.டி.சி., பஸ் டிக்கெட் ரோல்
ADDED : பிப் 05, 2025 09:39 PM

எலஹங்கா; காய்கறி கடையில் பில் போடுவதற்கு, பி.எம்.டி.சி., பஸ் டிக்கெட் ரோல் பயன்படுத்தப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்யும் திட்டம் அமலில் உள்ளது. பெண்கள் பஸ்சில் பயணிக்கும் போது, ஆதார் அட்டையை காண்பித்து, எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறி, 'ஜீரோ' டிக்கெட் பெற்று கொள்ள வேண்டும் என்பது நடைமுறை.
பெண்களுக்கு டிக்கெட் கொடுக்காமலேயே டிக்கெட் கொடுத்ததாக கூறி கணக்கு காட்டுவதற்காக, டிக்கெட்டை பிரின்ட் எடுத்து கண்டக்டர் ஒருவர் கிழித்து போட்ட நிகழ்வுகளும் நடந்தது. இந்நிலையில் காய்கறி கடை ஒன்றில் பில் போட, பி.எம்.டி.சி., பஸ் டிக்கெட் ரோல் பயன்படுத்தப்படுவது தெரிந்துள்ளது.
பெங்களூரு எலஹங்கா அட்டூர் லே - அவுட்டில் உள்ள காய்கறி கடையில் பில் போடும் இயந்திரத்தில், பி.எம்.டி.சி., பஸ் டிக்கெட் ரோலை வைத்து பில் போட்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
அந்த காய்கறி கடைக்கு சென்ற பி.எம்.டி.சி., அதிகாரிகள் இரண்டு டிக்கெட் ரோல்களை பறிமுதல் செய்தனர். இன்னும் நிறைய கடைகளில் பி.எம்.டி.சி., டிக்கெட் ரோல் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி பி.எம்.டி.சி., தலைமை போக்குவரத்து மேலாளர் பிரபாகர் ரெட்டி கூறுகையில், ''பி.எம்.டி.சி.,யில் பணியாற்றும் யாரோ டிக்கெட் ரோல்களை திருடி விற்று உள்ளனர். அந்த நபர் யார் என்று கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.