வால்வோ பஸ்களுக்கு பி.எம்.டி.சி. குட்பை? நஷ்டத்தை ஈடுகட்ட புதிய திட்டம்!
வால்வோ பஸ்களுக்கு பி.எம்.டி.சி. குட்பை? நஷ்டத்தை ஈடுகட்ட புதிய திட்டம்!
ADDED : ஜன 22, 2024 06:03 AM
பெங்களூரு: வால்வோ பஸ்களுக்கு, குட்பை கூற பி.எம்.டி.சி., ஆலோசிக்கிறது. விமான நிலையத்துக்கு மின்சார ஏ.சி., பஸ்களை இயக்க தயாராகிறது.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக டீசல் விலை ஏறுமுகமாவதால், பஸ்களை நிர்வகிப்பதே பி.எம்.டி.சி.,க்கு பெரும் தலைவலியாக உள்ளது. குறிப்பாக வால்வோ பஸ்களை பராமரிக்க முடியாமல் திணறுகிறது.
வருவாய் குறைவு
அதிகமான லாபம் கிடைக்கும் என, எதிர்பார்த்து வால்வோ பஸ்களை பி.எம்.டி.சி., வாங்கியது. இந்த பஸ்களால் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. மாறாக நஷ்டமே அதிகரிக்கிறது. நஷ்டத்தை சமாளிக்க, வால்வோ பஸ்களின் டிரிப் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அப்போதும் நஷ்டத்தை ஈடுகட்ட முடியவில்லை.
இதை மனதில் கொண்டு, வால்வோ பஸ்களின் போக்குவரத்தை படிப்படியாக குறைக்க, பி.எம்.டி.சி., திட்டமிட்டுள்ளது. வரும் நாட்களில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வால்வோ பஸ்களுக்கு பதிலாக, மின்சார ஏ.சி., பஸ்களை இயக்க தயாராகிறது.
கடந்த 2020ன் மார்ச்சில், வஜ்ரா, வாயு வஜ்ரா வால்வோ பஸ்கள் எண்ணிக்கை 767 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 342 ஆக குறைந்துள்ளது.
மாற்று பஸ்கள்
ஏற்கனவே பெங்களூரில் 490 மின்சார பஸ்கள் இயங்குகின்றன. வரும் நாட்களில் மேலும் 821 மின்சார பஸ்கள், பி.எம்.டி.சி.,யில் சேர்க்கப்படவுள்ளன. பயணியரிடம் மின்சார பஸ்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது விமான நிலையத்துக்கு, வாயு வஜ்ரா வால்வோ பஸ்கள் இயங்குகின்றன. இதனால் காற்று மாசு அதிகரிக்கிறது. இந்த பஸ்கள் நிர்வகிப்பு செலவும் அதிகரிக்கிறது. கி.மீ.க்கு 85 ரூபாய் செலவாகிறது. ஆனால் மின்சார பஸ்களுக்கு 55 முதல் 60 ரூபாய் செலவாகிறது.
மின்சார பஸ்களை இயக்குவதால், பி.எம்.டி.சி.,க்கு வருவாய் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம். நாட்டிலேயே பி.எம்.டி.சி., மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி., போக்குவரத்து சேவை, முன் மாதிரியாக உள்ளது. மின்சார பஸ்களை இயக்குவதால், சுற்றுச்சூழலையும் காப்பாற்றலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.