34 எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய தலைவர் பதவி; காங்கிரஸ் அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டதன் பின்னணி
34 எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய தலைவர் பதவி; காங்கிரஸ் அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டதன் பின்னணி
ADDED : ஜன 27, 2024 12:39 AM

பெங்களூரு : 34 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை, வாரிய தலைவர்களாக நியமித்து, கர்நாடகா அரசு நேற்று உத்தரவிட்டது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம், காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றபோது, பெரும்பாலான மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
'அமைச்சர் பதவிக்கு இணையான வாரிய தலைவர் பதவியாவது தாருங்கள்' என, மேலிடத்துக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், வாரிய தலைவர் பதவியை நியமனத்தில், காங்கிரஸ் மேலிடம் இழுத்தடித்து வந்தது.
கடுப்பான எம்.எல்.ஏ.,க்கள், வாரிய தலைவர் பதவிகளை விரைவில் நிரப்பும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இணைந்து, வாரிய தலைவர்கள் பதவிக்கு எம்.எல்.ஏ.,க்கள், கட்சியின் தொண்டர்கள் பெயர் பட்டியலை அனுப்பினர். '36 எம்.எல்.ஏ.,க்கள், 39 கட்சி நிர்வாகிகளுக்கு வாரிய தலைவர் பதவி கிடைக்கும்' என, துணை முதல்வர் சிவகுமார் கூறி இருந்தார்.
ஆனால், முதல்வரும், துணை முதல்வரும் அனுப்பிய பெயர் பட்டியலில், சிலரது பெயரை நீக்கிவிட்டு, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் சொந்த ஊரான கலபுரகியை சேர்ந்த, நான்கு பேரின் பெயர்களை சேர்த்து, மேலிடம் ஒரு பட்டியலை, கர்நாடக அரசுக்கு அனுப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் மேலிட தலைவர்கள், கர்நாடகா வந்து பேச்சு நடத்துவர் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகி, ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று முன்தினம் மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார். காங்கிரசில் அவருக்கு பதவி கிடைக்காததால், பா.ஜ.,விற்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
இதுபோல வாரிய தலைவர் பதவி கிடைக்காமல், அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு, பா.ஜ., வலை விரிக்கலாம் என்று நினைத்து, காங்கிரஸ் மேலிடம் உஷாரானது.
இதையடுத்து, 34 எம்.எல்.ஏ.,க்களை வாரிய தலைவர்களாக நியமனம் செய்து, கர்நாடகா அரசு நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தது.
புதிய வாரிய தலைவர்களில், 17 பேர் வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அங்கு ஓட்டுகளை தக்கவைத்துக் கொள்ள, காங்கிரஸ் முன்னுரிமை கொடுத்து உள்ளது.
முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரு மாவட்டத்தின் அனில் சிக்கமாதுவுக்கு இடம் கிடைத்து இருக்கிறது.
சீனிவாஸ், சிவலிங்கே கவுடா ஆகிய இருவரும் ம.ஜ.த.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்து எம்.எல்.ஏ., ஆனவர்கள். ரகுமூர்த்தி தனக்கு வாரிய தலைவர் பதவி வேண்டாம் என்று, காங்கிரஸ் மேலிடத்திற்கு கடிதம் எழுதி இருந்தார்.
ஆனாலும் அவருக்கு பதவி கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

