குடிநீர் கட்டண உயர்வுக்கு ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரியம் கடிதம்
குடிநீர் கட்டண உயர்வுக்கு ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரியம் கடிதம்
ADDED : டிச 06, 2024 06:49 AM

பெங்களூரு: பெங்களூரில், குடிநீர் திருத்த கட்டணத்தை ஆதரிக்கும்படி எம்.எல்.ஏ.,க்களுக்கு, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வடிகால் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து, அவர் எழுதிய கடிதம்:
மொத்தம் 1.50 கோடி மக்கள் வசிக்கும் பெங்களூரு நகருக்கு, நகரில் இருந்து 100 கி.மீ.,யில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. நகரில் 10 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் நீர் வளங்கள் மற்றும் கழிவு நீர் அமைப்புகளின் இயக்க செலவுகள் இரட்டிப்பாகி உள்ளன.
சிக்கல்
கடந்த பத்து ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் திருத்தப்படவில்லை. கடந்த 2014ல் நிர்ணயம் செய்யப்பட்ட குடிநீர் கட்டணத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் தான் இப்போதும் கிடைக்கிறது. அந்த வருமானத்தை வைத்து தற்போதைய செயல்பாட்டு செலவுகளை ஈடு கட்ட முடியவில்லை. குடிநீர் கட்டணத்தை மாற்றி அமைக்கா விட்டால், குடிநீர் வாரியத்தின் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும்.
வளர்ந்து வரும் நகரத்திற்கு ஏற்றார் போல், குடிநீர் மற்றும் வடிகால் வாரிய துறையிலும் உலக தரம் வாய்ந்த வசதிகளுடன் முழு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வடிகால் சேவைகளை மேம்படுத்த, மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.
குடிநீர் வாரியத்தில் இருப்பை பராமரிக்க கட்டண திருத்தம் அவசியம். கட்டண திருத்தத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள். இன்னும் சில நாட்களில் கட்டண சீராய்வு தொடர்பாக துணை முதல்வர் சிவகுமார் கூட்டம் நடத்துவார். கூட்டத்தில் நீங்களும் பங்கேற்று குடிநீர் கட்டண சீராய்வுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுகிறேன்.
செலவு அதிகரிப்பு
தற்போது வாரியத்தின் மாத செலவு 170 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால் வசூலிக்கப்படும் கட்டணம் 129 கோடி ரூபாய் மட்டுமே.
மாநகராட்சியின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு, காவிரி 5ம் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் முதல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாதந்தோறும் 40 கோடி ரூபாய் கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. வாரியத்தின் செலவு ஒவ்வொரு மாதமும் 210 கோடியாக உயரும். இது, உலகளாவிய நிதி நிறுவனங்களிடம் இருந்து தேவையான நிதி உதவியை பெறுவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.