ADDED : டிச 20, 2024 01:47 AM

மும்பைமும்பையில் அரபிக்கடலில் பயணியர் படகு மீது கடற்படை படகு மோதிய விபத்தில் மாயமான இருவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை, 14 ஆக உயர்ந்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே அரபிக்கடலில் எலிபென்டா தீவில் உள்ள குகை கோவிலை காண, 'கேட் வே ஆப் இந்தியா'வில் இருந்து நேற்று முன்தினம் 113 பேருடன் 'நீல்கமல்' என்ற பயணியர் படகு புறப்பட்டு சென்றது.
நடுக்கடலில் சென்றபோது அந்த படகு மீது அதிவேகமாக சென்ற கடற்படை ரோந்து படகு மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பயணியர் படகில் சென்ற 10 பேர் மற்றும் கடற்படை வீரர்கள் மூவர் என 13 பேர் உயிரிழந்தனர்; காயம் அடைந்த இருவர் உள்பட 98 பேரை கடற்படையினர் மீட்டனர்.
பயணியர் படகில் சென்ற ஹன்ஸ்ராஜ் பதி, 43, மற்றும் ஜோகன் முஹமது நிசார் அஹ்மது பதான், 7, ஆகியோர் மாயமாகினர். இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் கடலில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது படகு அருகே ஹன்ஸ்ராஜ் பதியின் சடலம் மீட்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மாயமான சிறுவன் பதானை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.