கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி: விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை
கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி: விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை
ADDED : மார் 06, 2025 10:21 PM

பிரயாக்ராஜ்: கும்பமேளாவில் படகோட்டி ஒருவர் 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மகா கும்பமேளாவில் படகோட்டி பிந்து மகாரா, ரூ.30 கோடி வருவாய் ஈட்டியதாக உத்தரப் பிரதேச அரசு கூறிய ஒரு நாளுக்குப் பிறகு, சமாஜ்வாடி கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் இந்தக் கூற்றுக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியுள்ளன.
இது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் கூறியதாவது:
இந்தச் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். ஒரு குடும்பம் மகா கும்பமேளாவில் மட்டும் ரூ.30 கோடி சம்பாதித்திருந்தால், ஜிஎஸ்டி எவ்வளவு கிடைத்தது என்பதைச் சொல்லுங்கள். மகாராவுக்கு குற்றப் பின்னணி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறியதாவது:
45 நாள் மகா கும்பமேளாவின் போது பக்தர்களை ஏற்றிச் செல்வதன் மூலம் ஒரு குடும்பம் எவ்வாறு இவ்வளவு செல்வத்தை குவிக்க முடியும்?
உ.பி. சட்டமன்றத்தில் முதல்வர் வெளிப்படுத்திய வருமானத்திற்கு ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் செலுத்தப்பட்டதா?
மேலும், சட்டமன்றத்தில் வழங்கப்பட்ட வருமான விவரங்கள் சரியாக இருந்தால், அரசு நிர்ணயித்த விகிதத்தில் இவ்வளவு லாபம் ஈட்ட முடியுமா?
அப்படி எனில் பக்தர்கள் ஏமாற்றப்பட்டதாக தெரியவில்லையா?
இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.