ADDED : ஜூன் 08, 2025 10:05 PM

ஐதராபாத்: கோதாவரி ஆற்றில் மூழ்கிய 6 இளைஞர்களின் உடல்களை மீட்பு படையினர் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு இன்று மீட்டனர்.
தெலுங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபல்பள்ளி மாவட்டத்தின் மகாதேவ்பூர் மண்டலத்தில் உள்ள மெடிகட்டா தடுப்பணை உள்ளது. இங்கு அம்பத்பள்ளியில் உள்ள தங்கள் உறவினர் வீட்டில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள், சிலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று கோதாவரி ஆற்றில் நீந்துவதற்காக சென்றனர். அப்படி சென்றவர்களில் இரண்டு சகோதரர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக நீரில் முழ்கினர்.
நேற்று மாலையில் இளைஞர்கள் ஆற்றில் மூழ்கியதாக கிடைத்த தகவலின்படி, மாநில பேரிடர் மீட்புப் படையினரும் உள்ளூர் நீச்சல் வீரர்களும் ஆற்றில் மூழ்கிய இடத்திற்கு சென்றுபெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். நீண்ட நேர தேடுதல் நடவடிக்கைக்கு பிறகு, இன்று பிற்பகலில் கோதாவரி ஆற்றில் மூழ்கி ஆறு இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
கோதாவரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்கள் மகாதேவ்பூர் மண்டலம் அம்பத்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பட்டி மதுசூதன், 20, அவரது சகோதரர் பட்டி சிவமனோஜ், 16, டி.ரக்ஷித், 13, மற்றும் கே.சாகர், 17, கோர்லகுண்டாவைச் சேர்ந்த பி.ராம்சரண், 18, மற்றும் ஸ்தம்பம்பள்ளி மண்டல் கிராமத்தைச் சேர்ந்த பி.ராகுல் என அடையாளம் காணப்பட்டது. மேற்கொண்டு விசாரணை நடக்கிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
மஹாராஷ்டிரா மாநிலத்திலும் இதே போல் ஆறு பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியடைய செய்துள்ளது.