நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய மூன்று பேர் உடல்கள் மீட்பு
நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய மூன்று பேர் உடல்கள் மீட்பு
ADDED : ஜன 11, 2025 11:26 PM

குவஹாத்தி: அசாமில் நிலக்கரி சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களில், மேலும் மூன்று பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதன் காரணமாக, பலி எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் திமா ஹசாவோ மாவட்டத்தின் உமராங்சோ பகுதியில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது.
இதில், 'ரேட் ஹோல்' எனப்படும் எலி வளை முறையில் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில், ஒன்பது தொழிலாளர்கள் கடந்த 6ம் தேதி ஈடுபட்டிருந்தனர். அப்போது நிலக்கரி சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கினர்.
தகவலறிந்து வந்த மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தொழிலாளர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர்.
உள்ளே சிக்கிய தொழிலாளர் ஒருவரின் உடல், கடந்த 8ம் தேதி மீட்கப்பட்டது.
இந்நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பின் மேலும் மூன்று பேரின் உடல்களை மீட்புக்குழு நேற்று மீட்டது. இதைத்தொடர்ந்து, மற்ற ஐந்து பேரை உயிருடன் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.