ADDED : ஆக 14, 2025 02:51 AM
புதுடில்லி:பூங்கா மரத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டவர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு டில்லியின் இந்தர்லோக் ஷெஹ்சாதா பாக் கச்ரா பூங்காவில் உள்ள ஒரு மரத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் தொங்குவதாக, 11ம் தேதி மாலை 6:00 மணிக்கு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இந்தர்லோக் போலீசார் உடலை மீட்டு, சப்ஜி மண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அசம்கர் நகரைச் சேர்ந்த மனோஜ்,42, என்பதும், இந்தர்லோக் பகுதியில் ரிக் ஷா ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. மது- பழக்கத்துக்கு அடிமையான மனோஜ், ஐந்து நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இருப்பினும், உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகே, கொலையா? தற்கொலையா? என தெரிய வரும் என போலீசார் கூறினர்.
குற்றப் பிரிவு மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். அந்த இடத்தில் இருந்து, மொபைல் போன் மற்றும் ஆதார் அட்டை கைப்பற்றப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.