ADDED : ஜூன் 26, 2025 09:19 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, ஆற்றில் மாயமான கல்லுாரி மாணவனின் உடல் மீட்கப்பட்டது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் காவச்சேரி பகுதியை சேர்ந்த சிவராமனின் மகன் பிரணவ், 21. ஆலத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., இறுதி ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், இவர் கடந்த, 24ம் தேதி நண்பர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பின், மாலை, 4:00 மணிக்கு, நண்பர்கள் ஏழு பேர் கரிங்குளம் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றனர்.
கனமழையால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு சென்றது. அப்போது, ஆற்றில் குளிக்க இறங்கிய பிரணவ், ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டார். இதை கண்ட நண்பர்களின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பிரணவ் நீரில் மூழ்கினார்.
தகவல் அறிந்து வந்த, ஆலத்தூர் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் இரு நாட்களாக அப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 60 கி.மீ., தொலைவில் உள்ள பட்டாம்பி பாரதப்புழை ஆற்றங்கரை ஓரத்தில், அவரது உடல் கரை ஒதுங்கியது. பட்டாம்பி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.