நடுவானில் போயிங் 757 விமானத்தில் தீ விபத்து: உயிர் தப்பிய 273 பயணிகள்
நடுவானில் போயிங் 757 விமானத்தில் தீ விபத்து: உயிர் தப்பிய 273 பயணிகள்
ADDED : ஆக 18, 2025 09:10 PM

புதுடில்லி: கிரீஸில் இருந்து ஜெர்மனி சென்ற போயிங் 757 விமானத்தில் நடுவானில் தீப்பற்றியதால் அவசரமாக இத்தாலிக்கு திருப்பிவிடப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக தரை இறங்கினர். பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி கிரீஸ் நாட்டின் கோர்புவிலிருந்து ஜெர்மனிக்கு செல்லும் போயிங் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றியது. அந்த விமானத்தில் 273 பயணிகளும் மற்றும் 8 பணியாளர்களும் இருந்தனர். அந்த விமானம் அப்போது டஸ்ஸல்டார்ப் நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்த சம்பவம் நடந்த நிலையில், இத்தாலியின் பிரிண்டிசி நகரில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். உடனடியாக தீ அணைக்கப்பட்டது. விமானம் தீப்பற்றியது குறித்து வீடியோ எடுத்தவர்கள் அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டனர்.
அந்த வீடியோ தற்போது வைரலாகியது.18 நிமிட வீடியோவில், விமானத்தின் வலதுபுற நடுப்பகுதியில் தீப்பொறி இருப்பதை காட்டுகிறது.
இது தொடர்பாக, விமான அதிகாரிகள் கூறுகையில், 'பிரிண்டிசி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து 273 பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர். மறுநாள் டசெல்டார்ப் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர்' என்றனர்.
பயணிகள் விமானத்தில் போயிங் 757 உலகின் மிகப் பழமையான மாடல்களில் ஒன்றாகும். மேலும் இது அடாரி பெராரி என்று செல்லப்பெயர் பெற்றது, மேலும் இது தற்போது 50 ஆண்டுகால சேவையில் உள்ளது.
போயிங் விமானம் நடுவானில் தீப்பிடித்தது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம் அமெரிக்க விமான நிறுவனமான டெல்டாவால் இயக்கப்படும் லாஸ் ஏஞ்சல்ஸ்-அட்லாண்டா விமானம் தீப்பிடித்து எரிந்ததால் பாதியில் திரும்ப வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.