போதிய ஆதாரம் இல்லாததால் குண்டு வெடிப்பு குற்றவாளி விடுதலை
போதிய ஆதாரம் இல்லாததால் குண்டு வெடிப்பு குற்றவாளி விடுதலை
ADDED : மார் 01, 2024 12:46 AM

ஜெய்ப்பூர்: ரயில் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீமை, போதிய ஆதாரம் இல்லாததால் அஜ்மீர் தடா நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.
உத்தர பிரதேசம் அயோத்தியில் தற்போது ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள இடத்தில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992ம் ஆண்டு டிச., 6ல் இடிக்கப்பட்டது.
இதன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, பயங்கரவாதிகள் 1993ல் ரயில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர்.
வழக்குப் பதிவு
உத்தர பிரதேசத்தின் லக்னோ, கான்பூர், தெலுங்கானாவின் ஹைதராபாத், குஜராத்தின் சூரத், மஹாராஷ்டிராவின் மும்பை ஆகிய இடங்களில் ஐந்து ரயில்களில் நடந்த குண்டு வெடிப்பில், இருவர் பலியாகினர்; 22 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில், 20 பேர் மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த ஒன்பது பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில், குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேருக்கு தடா நீதிமன்றம் 2004ல் ஆயுள் தண்டனை விதித்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நான்கு பேரை விடுவித்ததுடன் மீதமுள்ளவர்களுக்கு தண்டனையை உறுதி செய்தது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் எனப்படும் துண்டா, 2013ல் நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டார்.
இர்பான், ஹமீதுதீன் ஆகியோரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தண்டனை தொடர்பான வழக்கு அஜ்மீர் தடா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
சிறைவாசம்
இதில், சி.பி.ஐ., தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், முக்கிய குற்றவாளியான அப்துல் கரீமை நீதிமன்றம் நேற்று விடுதலை செய்வதாக அறிவித்தது.
இர்பான், 70, மற்றும் ஹமீதுதீன், 44, ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டாலும், பார்லிமென்ட் தாக்குதல் உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளதால் அப்துல் கரீமின் சிறைவாசம் தொடர்கிறது.

