பாலக்காடு கலெக்டர் ஆபீஸ்க்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
பாலக்காடு கலெக்டர் ஆபீஸ்க்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஏப் 24, 2025 10:58 PM

பாலக்காடு, ; பாலக்காடு கலெக்டர் அலுவலகத்துக்கு, மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.
கேரளா மாநிலம், பாலக்காடு கோட்டை மைதானம் அருகே மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு, நேற்று காலை 7:00 மணிக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் வந்தது.
அதில், கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சரியாக மதியம், 2:00 மணிக்கு வெடிக்கும் என்றும், போதை மாத்திரை கடத்திய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இருவரை விடுவிக்கும் வரை, தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
தகவல் கிடைத்ததும், மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரின் தலைமையிலான வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர், மோப்ப நாய், தீயணைப்பு படையினர், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, ஊழியர்களை வெளியேற்றி, சோதனை மேற்கொண்டனர். மாலை, 3:00 மணி வரை நடந்த சோதனையில், வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனால், தனிப்படையினரும், ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர்.
அதன்பின், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் தகவலால், அலுவலக பணிகள் நான்கு மணி நேரம் பாதிக்கப்பட்டன.
வெடிகுண்டு மிரட்டல், இ-மெயில் குறித்து, சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோல் கடந்த 16ம் தேதி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை தாக்கப்போவதாக, பாலக்காடு வருவாய்த்துறை அலுவலகத்துக்கு மிரட்டல் இ-மெயில் வந்தது குறிப்பிடத்தக்கது.