தமிழக எதிர்க்கட்சி தலைவரை தாக்க கேரளாவில் வெடிகுண்டு மிரட்டல்
தமிழக எதிர்க்கட்சி தலைவரை தாக்க கேரளாவில் வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஏப் 17, 2025 07:23 AM

பாலக்காடு: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை தாக்க, கேரளாவின் பாலக்காடு வருவாய் துறை அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம், பாலக்காடு செம்பை நினைவு இசைக் கல்லுாரி அருகே, மாவட்ட வருவாய் துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மின்னஞ்சலுக்கு நேற்று காலை 10:20 மணிக்கு, ராணா தஹாவூர் என்ற மின்னஞ்சலில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதில், அ.தி.மு.க., பொதுச்செயலரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமியை தாக்கும் நோக்கத்துடன், வருவாய் துறை அலுவலகத்தில் ஆர்.டி.எக்ஸ்., வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், மதியம் 1:30 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
தகவல் கிடைத்ததும், மாவட்ட ஏ.எஸ்.பி., ராஜேஷ்குமார் தலைமையிலான வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் மோப்ப நாய் அடங்கிய தனிப்படையினர் அங்கு வந்தனர். வருவாய் துறை அலுவலகத்தில் ஊழியர்களை வெளியேற்றி, சோதனை மேற்கொண்டனர். மதியம் 2:00 மணி வரை நடந்த சோதனையில், வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனால், தனிப்பிரிவினரும், ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர்.
அதன்பின், வருவாய் துறை ஊழியர்கள் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் தகவலால், அலுவலக பணிகள் நான்கு மணி நேரம் பாதிக்கப்பட்டன. மின்னஞ்சல் குறித்து, சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.