ஒரே நாளில் 20 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
ஒரே நாளில் 20 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
ADDED : அக் 20, 2024 12:12 AM

மும்பை: நாடு முழுதும் நேற்று ஒரே நாளில், 20 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில், கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
விசாரணையில், அது வதந்தி என்பது கண்டுபிடிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, அனைத்து விமான நிறுவனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
விமானங்களுக்கு மிரட்டல் விடுப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பது, விமானத்தில் பயணிக்க தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
மிரட்டல் விடுத்தது தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் உட்பட சிலரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இந்நிலையில், நாடு முழுதும் நேற்று ஒரே நாளில் மட்டும், 20 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாச ஏர், விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட், ஸ்டார் ஏர் உள்ளிட்ட நிறுவனங்கள் விமானங்கள் இதில் அடங்கும்.
பாதுகாப்பு அச்சுறுத்தலால் சில விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதமானது. இந்த வாரத்தில் மட்டும், 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு இதுபோன்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.