ADDED : ஏப் 02, 2026 01:08 AM

புதுடில்லி: மேயர் அலுவலகத்துக்கு, 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டில்லி மாநகராட்சி மேயர் ராஜா இக்பால் சிங் அதிகாரபூர்வ இ-மெயிலுக்கு, காலிஸ்தான் நேஷனல் ஆர்மி என்ற இ-மெயில் முகவரியில் இருந்து நேற்று வந்த தகவலில், மேயர் அலுவலகத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், மதியம் 2:11 மணிக்கு வெடிகுண்டுகள் வெடிக்கும் எனவும் கூறப்பட்டு இருந்தது.
தகவல் அறிந்து, வெடிகுண்டு செயலிழப்பு படையினர், மோப்ப நாய் படையினர் மற்றும் போலீசார், மேயர் அலுவலகத்தில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். வெடிபொருட்கள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
வெடிக்குண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேயர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும், ஆம் ஆத்மி கவுன்சிலருமான அங்குஷ் நாரங், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
நான்கு இயந்திரங்கள் கொண்ட பா.ஜ., ஆட்சியில், டில்லியின் பாதுகாப்பு சீர்குலைத்து விட்டது. மாநகரின் மேயருக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பா.ஜ., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதை இது உணர்த்துகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஆபத்தான சூழலில் வாழ்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேயர் ராஜ இக்பால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, அலுவலகத்தில் இயல்பான செயல்பாடுகள் மீண்டும் துவங்கின. வதந்திகளை பொதுமக்கள் பொருட் படுத்த வேண்டாம்.
இத்தகைய அச்சுறுத்தல்கள் நிர்வாகப் பணிகளையோ அல்லது பொதுச் சேவைகளையோ பாதிக்காது. கடந்த, 2022-ம் ஆண்டு இதேபோல மிரட்டல் வந்தது. இத்தகைய மிரட்டல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அனுப்பப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
