பள்ளி, கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் சோதனையில் புரளி என தெரிந்தது
பள்ளி, கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் சோதனையில் புரளி என தெரிந்தது
ADDED : ஜூலை 15, 2025 10:20 PM

புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று முன் தினம், மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், செயின்ட் ஸ்டீபன் கல்லூரி மற்றும் செயின்ட் தாமஸ் பள்ளிக்கு நேற்று காலை, 7:15 மணிக்கு வந்த இ - மெயிலில், வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் வந்திருந்தது.
தகவல் அறிந்து, போலீசார் வெடிகுண்டு செயலிழப்புப் படை, மோப்ப நாய் படை, தீயணைப்புத் துறையினர் இரு இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால், வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
போலீஸ் துணைக் கமிஷனர் ராஜா பந்தியா கூறியதாவது:
கல்லுாரி வளாகத்திலும் நுாலகத்திலும் நான்கு வெடிகுண்டுகள் மற்றும் இரண்டு ஆர்.டி.எக்ஸ்., குண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், மதியம், 2:00 மணிக்குள் அவை வெடிக்கும் எனவும் இ -மெயிலில் கூறப்பட்டு இருந்தது. கல்லுாரி மற்றும் பள்ளி வளாகங்களில் முழுமையான சோதனை நடத்தப்பட்டது.
வெடிபொருட்கள் எதுவும் இல்லை. மிரட்டல் விடுத்தவர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
துவாரகா மற்றும் பிரசாந்த் விஹாரில் உள்ள சி.ஆர்.பி.எப்., பள்ளிகள் மற்றும் சாணக்யபுரி கடற்படை குழந்தைகள் பள்ளி ஆகியவற்றுக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
நான்கு இன்ஜின் பா.ஜ., அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. தலைநகர் டில்லியில் என்ன நடக்கிறது? நேற்று முன் தினம் மூன்று பள்ளிகள், நேற்று ஒரு கல்லுாரி மற்றும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. குழந்தைகள் மற்றும் பெற்றோர் பீதி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆம் ஆத்மி மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிஷி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
டில்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமில்லையா? பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. பெற்றோர் மற்றும் மாணவ - மாணவியர் பீதி அடைந்துள்ளனர். பா.ஜ.,வின் நான்கு இன்ஜின் அரசு பாதுகாப்பு அளிக்க தவறி விட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.