அஜித் பவார் விமான விபத்தும்... 2023ல் நடந்த சம்பவமும்...!
அஜித் பவார் விமான விபத்தும்... 2023ல் நடந்த சம்பவமும்...!
UPDATED : ஜன 28, 2026 10:28 PM
ADDED : ஜன 28, 2026 12:52 PM

மும்பை: மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமான விபத்தை போலவே, 2023ல் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் அனைவரும் காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், இன்று நடந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, தனி விமானம் மூலம் மும்பையில் இருந்து புனே மாவட்டம் பாராமதிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு தரையிறங்கும் போது, ஓடுபாதையை விட்டு விலகி, விமானம் இரு துண்டுகளாக உடைந்து விபத்துக்குள்ளானது. இதில், அஜித் பவார் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமான விபத்து சம்பவத்தை தொடர்ந்து, 2023ல் நடந்த மற்றொரு விமான விபத்து சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அஜித் பவார் பயணித்த விமானமும், 2023ல் விபத்துக்குள்ளான விமானமும் 'பம்பார்டியர் லியர்ஜெட் 45எக்ஸ்ஆர்' (Bombardier Learjet 45XR) ரக விமானம் ஆகும். பதிவெண் மட்டுமே வேறு வேறு. அஜித் பவார் பயணித்தது VT-SSK என்ற பதிவெண் கொண்ட விமானம். 2023ல் விபத்தில் சிக்கிய விமானத்தின் பதிவெண் VT-DBL.
2023ல் நடந்தது என்ன?
கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி விசாகப்பட்டினத்திலிருந்து 6 பயணிகளுடன் மும்பை சென்ற 'பம்பார்டியர் லியர்ஜெட் 45எக்ஸ்ஆர்' விமானம் மாலை 5.02 மணியளவில் விபத்தில் சிக்கியது. விமானம் தரையிறங்கும் போது, பலத்த மழை பெய்ததன் காரணமாக, ஓடுபாதையில் இறங்கும் போது, விமானத்தின் முக்கிய பகுதி உடைந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 6 பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது பாராமதியில் நடந்த விபத்திலும் விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி இரண்டு பகுதிகளாக உடைந்துள்ளது. பம்பார்டியர் லியர்ஜெட் ரக விமானங்கள், தரையிறங்கும் போதே அடுத்தடுத்து விபத்தில் சிக்கியிருப்பது, கேள்வியையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
அரசியல்வாதிகளின் விருப்பம்
பம்பார்டியர் நிறுவனம் தயாரிக்கும் லியர்ஜெட் மாடல் விமானம் 1990 காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. குறைந்த தூர விமான பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் லியர்ஜெட் 45 ரக விமானத்தில் 6 முதல் 8 பேர் வரை பயணிக்கலாம். மணிக்கு 850 கிலோ மீட்டர் வேகம் வரையில் செல்லக் கூடிய திறன் கொண்ட இந்த விமானம், சிறு விமான நிலையங்கள், குறுகிய ஓடுபாதைகளில் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 3,000 கிலோ மீட்டர் பயணிக்கக்கூடிய திறன் கொண்டதால், அரசியல்வாதிகள், திரைபிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பம்பார்டியர் லியர்ஜெட் 45 ரக விமானத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

