காங்., பி.ஆர்.எஸ் இரண்டும் ஊழல் கட்சிகள்: கிஷன் ரெட்டி
காங்., பி.ஆர்.எஸ் இரண்டும் ஊழல் கட்சிகள்: கிஷன் ரெட்டி
UPDATED : ஜன 02, 2024 03:18 PM
ADDED : ஜன 02, 2024 03:05 PM

ஹைதராபாத்: ‛காங்கிரஸ் கட்சியும், பி.ஆர்.எஸ் (பாரத் ராஷ்ட்ர சமிதி) கட்சியும் ஒன்றுதான். இரு கட்சிக்கும் ஒரே டி.என்.ஏ உள்ளது; இரண்டும் ஊழல் கட்சிகள்' என தெலுங்கானா மாநில பா.ஜ., தலைவர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில முதல்வராகவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகவும் இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். சர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார். தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தெலுங்கானா மாநில பா.ஜ., தலைவர் கிஷன் ரெட்டி கூறியதாவது: காங்கிரஸ் கட்சியும், பி.ஆர்.எஸ் (பாரத் ராஷ்ட்ர சமிதி) கட்சியும் ஒன்றுதான். இரு கட்சிக்கும் ஒரே டி.என்.ஏ உள்ளது; இரண்டும் ஊழல் கட்சிகள். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது காளேஸ்வரம் திட்ட ஊழல் குறித்து சிபிஐ விசாரணை கோரியிருந்தது.
இன்று காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால், அதே கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா மாநில காங்., அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். அப்படி கடிதம் எழுதினால், 48 மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு எங்கள் அரசு உத்தரவிடும் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

