ADDED : செப் 28, 2025 11:33 PM

பரிதாபாத்: ஹரியானாவில் உள்ள பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் வீட்டில், விலை உயர்ந்த பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், 43. ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர்.
இவருக்கு ஹரியானா வின் பரிதாபாதில் உள்ள செக்டார் 46ல் வீடு உள்ளது. மேகாலயா மாநிலத்தின் சோக்ராவில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்க மேரி கோம் சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 24ல் பரிதாபாதில் உள்ள மேரி கோம் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த டிவி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றனர்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் மேகாலயாவில் உள்ள மேரி கோமுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அளித்த புகாரின்படி பரிதாபாத் போலீசார் மர்மநபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேரி கோமின் வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், டிவி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
திருடி செல்லப்பட்ட மற்ற பொருட்கள் எவை என்பது குறித்து மேரி கோம் பரிதாபாத் திரும்பிய பிறகே தெரியவரும். புகாரின் அடிப்படையில் ஆறு தனித்தனி குழுக்கள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.