ADDED : மே 03, 2025 08:48 PM
புதுடில்லி:வாலிபரை கத்தியால் குத்திய சிறுவன் கைது செய்யப்பட்டார்.
கிழக்கு டில்லி மயூர் விஹாரில் வசிப்பவர் ராகேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கும் முன்விரோதம் இருந்தது.
ஏப்.,30ம் தேதி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடும் ஆத்திரம் அடைந்த சிறுவன், ராகேஷ் வயிற்றில் கத்தியால் சரமாரியாகக் குத்தி விட்டு ஓடினான்.
அங்கிருந்தவர்கள் ராகேஷை மீட்டு, லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, முதலுதவி செய்யப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, மயூர் விஹார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திரிலோக்புரி 31வது பிளாக்கில் ஒரு வீட்டில் மறைந்திருந்த சிறுவன் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் எட்டாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தியவன் என்பதும், இதற்கு முன் குற்றச் செயல்களில் ஈடுபட்டதில்லை என்றும் தெரிய வந்துள்ளது. விசாரணை நடக்கிறது.