ADDED : நவ 28, 2024 01:10 AM

இந்திரா நகர்: தன்னுடன் பேசாமல், வேறொருவருடன் பேசியதால், காதலியை கொலை செய்ய காதலன் ஆன்லைனில் கயிறு வாங்கிய விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காதலனை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் கேரளா சென்றுள்ளனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மாயா கோகாய், 19. கேரளாவை சேர்ந்த ஆரவ், 26. இவர்கள் இருவரும் பெங்களூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்தனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில், காதல் ஜோடி, வேலையை விட்டு வெளியேறினர்.
இதன் பின், ஏழு மாதங்களுக்கு முன்பு, ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில், மாயா வேலைக்கு சேர்ந்தார். ஆரவிற்கு வேலை கிடைக்கவில்லை.
இந்த வேளையில், 'இன்ஸ்டாகிராமில்' வீடியோக்கள் பதிவிடுவதில் மாயா ஆர்வமாக இருந்துள்ளார். ஆரவிடம் சரியாக பேசவில்லை. இதனால், ஆத்திரமடைந்த காதலன், காதலியை கண்டித்துள்ளார். மேலும், மற்றொரு நபருடன், மாயா பேசி வந்ததையும் அறிந்த ஆரவ், காதலியை தீர்த்து கட்ட, திட்டங்கள் தீட்டினார்.
ஆசை வார்த்தைகள் கூறி, மாயாவை தனியாக அழைத்துள்ளார். இம்மாதம் 23ம் தேதி, இந்திரா நகரில் உள்ள ஹோட்டலில் இருவரும் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். 24ம் தேதி மாயாவை கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின் 'கால் டாக்சி' மூலம் ஆரவ் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் தான் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்திரா நகர் போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணையில் கிடைத்த புதிய தகவல்கள்:
கொலை செய்யும் நோக்கத்துடன், ஆரவ் ஹோட்டலுக்கு கத்தியுடன் வந்துள்ளார். காதலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்வதற்கு ஆன்லைன் மூலம் கயிறு வாங்கியுள்ளார். அவர் தப்பிச் சென்ற காரின் நம்பரை, கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து, கார் டிரைவரை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, 'காரில் ஏறிய ஆரவ், பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இறங்கிச் சென்றார்' என்றார்.
அவரை பிடிக்க இரண்டு போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆரவிற்கு சொந்த ஊர் கேரளா என்பதால், ஒரு குழுவினர் கேரளாவிற்கும், மற்றொரு குழுவினர் கர்நாடகாவிலும் தேடி வருகின்றனர்.