ADDED : ஜன 15, 2024 12:53 AM

ஹைதராபாத்: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, 'ஆஸ்ட்ரா' ஏவுகணையை நம் விமானப்படைக்கு வழங்கும் நிகழ்வை, ராணுவ இணையமைச்சர் அஜய் பட் நேற்று துவக்கி வைத்தார்.
டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில், வான் வழியாக தாக்குதல் நடத்தும் வகையில் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட, 'ஆஸ்ட்ரா' ஏவுகணை உருவாக்கப்பட்டது. இவ்வகை ஏவுகணைகள், வான்வழியாக 100 கி.மீ.,க்கு அப்பால் சென்று தாக்கும் திறன் உடையவை. மத்திய அரசின் சுயசார்பு கொள்கையின்படி, உள்நாட்டிலேயே தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த ஏவுகணையை, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கஞ்சன்பாகில் உள்ள, 'பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்' நிறுவனம் தயாரித்தது.
இதை, நம் விமானப் படைக்கு வழங்கும் நிகழ்வு நேற்று நடந்தது.
ராணுவ இணையமைச்சர் அஜய் பட் பங்கேற்று, இந்நிகழ்வை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், ''உலகளவில் வான் வழித்தாக்குதலில் சிறந்த ஆயுதமாக ஆஸ்ட்ரா ஏவுகணை உள்ளது. இதை, உள்நாட்டிலேயே தயாரித்து, நம் விமானப்படைக்கு வழங்கி இருப்பது பெருமைக்குரிய விஷயம்,'' என்றார்.
இந்நிகழ்ச்சியில் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மாதவராவ், டி.ஆர்.டி.ஓ., மற்றும் விமானப்படையின் உயரதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.