என்னையும் கொலை செய்ய சதி 'மாஜி' அமைச்சர் ரேவண்ணா 'பகீர்'
என்னையும் கொலை செய்ய சதி 'மாஜி' அமைச்சர் ரேவண்ணா 'பகீர்'
ADDED : ஜன 14, 2024 11:20 PM
ஹாசன்: ''ம.ஜ.த., பிரமுகர் கிருஷ்ணே கவுடாவின் கொலைக்கு பின், என்னையும், ஒப்பந்ததாரர் அஸ்வத் நாராயணாவையும் குறி வைத்தனர். என்னையும் கொலை செய்ய சதி நடக்கிறது, என ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா குற்றம்சாட்டினார்.
ஹாசனில் நேற்று அவர் கூறியதாவது:
ம.ஜ.த., பிரமுகர் கிருஷ்ணேகவுடா கொலை வழக்கில், இருவரை இன்னும் கைது செய்யவில்லை. இவர்களுக்கு உதவி செய்வது யார் என்பது, எனக்கு தெரியும். காலம் வரும் போது அனைத்தையும் பகிரங்கப்படுத்துவேன்.
கிருஷ்ணே கவுடாவை கொலை நடந்த பின், ஒரு வாரம் வரை என்னையும், ஒப்பந்ததாரர் அஸ்வத் நாராயணாவையும் குறி வைத்திருந்தனர். என்னை கொல்ல சதி நடக்கிறது. தேவகவுடா குடும்பத்தினரை ஒழித்து கட்ட, நான்கு ஆண்டுகளாக பெரிய சதி நடக்கிறது. இதில் பெரியவர்களின் கை வரிசை உள்ளது. எதற்கும் நான் பயப்படமாட்டேன்.
தேவகவுடா குடும்பத்தை ஒழித்து கட்ட முற்பட்டால், என்றாவது ஒருநாள் அவர்களே சதிக்கு பலியாவார்கள். 40 ஆண்டுகள் அரசியலில், இத்தகைய சதியை நான் பார்த்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., - எம்.பி.,
தாவணகெரே பா.ஜ., எம்.பி., சித்தேஸ்வர். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், போட்டியிட தயாராகி வருகிறார்.
ஆனால், இம்முறை மூத்த எம்.பி.,க்களுக்கு பதிலாக, புதியவர்களுக்கு சீட் கொடுக்க பா.ஜ., ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.
இந்நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வந்ததை, அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார். இது குறித்து, தாவணகெரேவில் சித்தேஸ்வர் கூறியதாவது:
எனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. என்னை தீர்த்து கட்ட வேண்டும் என, சிலர் காத்திருக்கின்றனர். என் காலை வெட்ட வேண்டும், விஷம் கொடுத்து கொலை செய்யவும், சதி திட்டம் தீட்டுகின்றனர். என் உயிருக்கு ஆபத்து இருப்பதால், எங்கு சென்றாலும் எச்சரிக்கையுடன் இருக்கிறேன்.
நான் யார் என்ன கொடுத்தாலும் சாப்பிடுவதில்லை. என்னை தாவணகெரேவில் இருந்து வெளியேற்ற, சிலர் முயற்சிக்கின்றனர். என் நண்பர்கள் வட்டாரத்திலேயே, என்னை ஒழிக்க சதி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.