ADDED : ஜன 14, 2024 11:22 PM
பெங்களூரு: நாடு முழுதும் கோவில்களை துாய்மை செய்யும் பணியில் பங்கேற்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்புக்கு, அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
உத்தரபிரதேசம், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா, வரும் 22ல் நடக்கவுள்ளது. அன்றைய தினம், நாட்டின் அனைத்து கோவில்களிலும் துாய்மை பணி செய்யும்படி, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பலத்த ஆதரவு கிடைத்துள்ளது.
மஹாராஷ்டிராவின், நாசிக்கில் உள்ள கலாராம் மந்திரை சமீபத்தில் பிரதமரே சுத்தம் செய்து ஊக்கப்படுத்தினார். பிரதமரின் அழைப்புக்கு, பலத்த ஆதரவு கிடைத்துள்ளது.
கர்நாடகாவில், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, ஷிவமொகா, ஷிகாரிபுராவின், ஹுச்சராயசுவாமி கோவில் வளாகத்தை, நேற்று சுத்தப்படுத்தினார்.
எதிர்க்கட்சி தலைவர் அசோக், ஜெயநகரின், சித்தி விநாயகர் கோவிலை, முன்னாள் அமைச்சர் அஸ்வத் நாராயணா, மல்லேஸ்வரத்தின் கோதண்ட ராமர் கோவிலை, மைசூரு எம்.பி., பிரதாப் சிம்ஹா, அங்குள்ள கோதண்ட ராமர் கோவிலை, முன்னாள் அமைச்சர் கோபாலய்யா, தொட்டம்மா தேவி கோவிலை சுத்தம் செய்வதில் ஈடுபட்டனர்.