வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க கனடா அரசு திட்டம்
வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க கனடா அரசு திட்டம்
ADDED : ஜன 15, 2024 12:54 AM
ஒட்டாவா: போதிய வீடுகள் இல்லாததாலும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்காததாலும், வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க, கனடா அரசு திட்டமிட்டுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடா, படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் வெளிநாட்டவருக்கு இருகரம் நீட்டி அழைப்பு விடுத்து வந்தது. வெளிநாடுகளில் படிக்க விரும்புவோரின் முன்னணி விருப்பங்களில் ஒன்றாக கனடா உள்ளது.
இந்நிலையில், கனடாவில் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் அதிகமானோர் வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான வீடுகள் அங்கு இல்லை.
இந்தப் பிரச்னை குறித்து, கனடாவின் குடியேற்றத் துறை அமைச்சர் மார்க் மில்லர் கூறியுள்ளதாவது:
இந்தப் பிரச்னை குறித்து கடந்த சில மாதங்களாகவே விவாதித்து வருகிறோம். அந்தந்த மாகாணங்களில் உள்ள நிலவரம் தொடர்பான தகவல்கள், புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இவற்றின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர் எண்ணிக்கையை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். அவர்களுக்கு தேவையான வீடுகள் இல்லாததால், இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளது. மாகாணங்களுக்கு ஏற்ப, இந்த மாணவர் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசின் புள்ளிவிபரங்களின்படி, இந்தாண்டில், 4.85 லட்சம் மாணவர்கள் வருவர் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், தலா, ஐந்து லட்சம் பேர் வருவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர வேலைவாய்ப்பு தேடியும் பல லட்சம் பேர் வருகின்றனர்.