ADDED : டிச 31, 2024 05:30 AM

மாண்டியா, 'சர்க்கரை நாடு' என அழைக்கப்படுகிறது. கரும்பு அதிகம் விளைவதே, இந்த பெயர் ஏற்பட முக்கிய காரணம். இம்மாவட்டம் ஆன்மிக தலமாகவும் விளங்குகிறது. இங்கு இயற்கை சூழலுக்கு நடுவே, பிரம்ம லிங்கேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இது, பக்தர்களை தன் வசம் ஈர்க்கிறது.
கனவில் உத்தரவு
மாண்டியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில், பிரம்ம லிங்கேஸ்வரா கோவிலும் ஒன்றாகும். இது கவிஞர்களுக்கு பிடித்தமான இடமாகும். இந்த இடத்தின் அழகை, கவிதையாக வடித்துள்ளனர். ஸ்ரவண பெளகோலாவின் அருகிலேயே, இக்கோவில் அமைந்துள்ளது.
ஹொய்சாளர்களின் முதலாவது நரசிம்மன் ஆட்சி காலத்தில், சாமந்தபாளையக்காரர் பரமய்ய நாயக்கரின் மனைவியாக இருந்தவர் பொம்மவே நாயகி. இவரே பிரம்ம லிங்கேஸ்வரா கோவிலை கட்டியதாக, புராணங்கள் கூறுகின்றன.
பிரசித்தி பெற்ற சிற்ப கலைஞர் தாசோஜாவின் கை வண்ணத்தில், கண்கவர் கோவில் கட்டப்பட்டது. பொம்மவே நாயகியின் கனவில் தோன்றிய சிவபெருமான், தனக்கு கோவில் கட்டும்படி உத்தரவிட்டார். இதன்படி கோவில் கட்ட முன் வந்தார்.
பேலுார், ஹளேபீடு தமிழகத்தின் தஞ்சாவூர் கோவில்களை விட, மாறுபட்ட வடிவத்தில், சிறப்பான கோவில் கட்ட வேண்டும் என, பொம்மவே நாயகி விரும்பினார். அதன்படியே கோவிலை கட்டி முடித்தார். நுணுக்கமான கலை நயத்துடன், கோவில் கட்டப்பட்டுள்ளது.
கற்களில் கடவுள் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் மேற்புரத்தில் சிவன், பார்வதியின் சிலைகள் உள்ளன.
சிறு சன்னிதிகள்
கோவில் வளாகத்தில் சூரியன், அம்பிகா துர்காதேவி, கணபதி, விஷ்ணு, சிவனுக்கு சிறு சிறு சன்னிதிகள் கட்டப்பட்டுள்ளன. நந்தி சிலையும் உள்ளது. மண்டபங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டபமும், மனதை சுண்டி இழுக்கும் கலை நயத்துடன் தென்படுகின்றன. அபூர்வமான பிரம்மேஸ்வரா லிங்கமும் உள்ளது.
கர்நாடகாவில் எந்த இடத்திலும் இதுபோன்ற அழகான, அபூர்வமான சிவலிங்கத்தை வேறு எங்கும் காண முடியாது.
நந்தியின் முகம் சிவன், பார்வதியை பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.
சங்கராந்தி அன்று அதிகாலை சூரிய கடவுள் குடி கொண்டுள்ள மண்டபத்தில் இருந்து, பிரம்மேஸ்வரா லிங்கத்தின் மீது சூரிய ஒளி நுழைவதை காணலாம்.
விஷ்ணு, சிவன் அருள்பாலிக்கும் அபூர்வ கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
கோவில் உள்ள நான்கு துாண்களில் மஹாபாரதம், ராமாயண காவியங்களை விவரிக்கும் சிற்பங்களை காணலாம்.
இவைகள் சிற்பிகளின் கலைத்திறனுக்கு சான்றாக உள்ளது. மஹிஷாசுர மர்த்தினி சாமுண்டீஸ்வரி, சென்னகேசவா, அர்ஜுனேஸ்வரா, சுப்ரமண்யா, சப்த கன்னியர்களின் விக்ரகங்களும் பக்தியை துாண்டுகின்றன.
ஒரு நாள் போதாது
கோவிலின் வெளிப்புறத்தில் பூவராஹா, கால பைரவி, ஜனார்த்தனா, கோவர்த்தனா, கிருஷ்ணர், உக்ர நரசிம்மர், சிவ பார்வதி, நடராஜர், விநாயகர், அர்த்த நாரீஸ்வரர், சிவ தாண்டவம், பிரம்மா, சரஸ்வதி உட்பட பல கடவுள்களின் விக்ரகங்களும் உள்ளன. பிரம்ம லிங்கேஸ்வரா கோவிலில் உள்ள விக்ரகங்களை காண, ஒரு நாள் போதாது; பல நாட்கள் தேவைப்படும்.
ஸ்ரீரங்கப்பட்டணாவின் ரங்கநாதசுவாமி கோவிலுக்கு வரும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளின் பக்தர்கள், பிரம்ம லிங்கேஸ்வரா கோவிலுக்கு வர மறப்பது இல்லை.
கோவிலை பற்றி ஹிந்து அறநிலையத் துறை அதிகமாக பிரசாரம் செய்வதுடன், இங்கு அடிப்படை வசதிகளை செய்யும்படி, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர் - நமது நிருபர் -.