இந்தியா கையில் பிரம்மாஸ்திரம்; சிந்து நதி ஒப்பந்தம் மறு ஆய்வு செய்ய பாகிஸ்தானுக்கு நோட்டீஸ்
இந்தியா கையில் பிரம்மாஸ்திரம்; சிந்து நதி ஒப்பந்தம் மறு ஆய்வு செய்ய பாகிஸ்தானுக்கு நோட்டீஸ்
ADDED : செப் 18, 2024 05:27 PM

புதுடில்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா, முறையான நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது இரு நாடுகளுக்கும் சொத்துக்கள் பொதுவாக பகிர்ந்து அளிக்கப்பட்டன. ஆனால் நதிநீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. உலக வங்கி மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்தி, இரு தரப்புக்கும் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, சிந்து மற்றும் அதன் துணை நதிகளின் மொத்த நீர் வளத்தில் 80 சதவீதம் பாகிஸ்தானுக்கும், 20 சதவீதம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்பது நீண்ட கால குறைபாடாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கத்துடன், ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 30ம் தேதி நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் (IWT) பிரிவு XII (3) இன் கீழ் இந்த நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.
சிந்து நதி ஒப்பந்தம் செப்டம்பர் 19, 1960 இல் கையெழுத்தானது. சிந்து நதி என்பது, இந்தியாவுக்குள் பாயும் மூன்று நதிகள் (ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் மற்றும் அவற்றின் துணை நதிகள்) மற்றும் பாகிஸ்தானுக்குள் பாயும் மூன்று நதிகள் (சிந்து, ஜீலம் மற்றும் செனாப் மற்றும் அவற்றின் துணை நதிகள்) ஆகியவற்றை உள்ளடக்கியது.
ஒப்பந்தத்தின்படி, சிந்து நதி நீர்வளத்தில் 20% இந்தியா கட்டுப்பாட்டில் உள்ளது; அதே நேரத்தில் பாகிஸ்தான் 80% பெறுகிறது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வாளர்கள், நாட்டின் பெரிய அளவு, மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் தண்ணீர் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஒப்பந்தம் நியாயமற்றது என்று கூறுகின்றனர்.சில ஆய்வாளர்கள் இந்த ஒப்பந்தம் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு தான் நன்மையை அளிக்கிறது என்றும் கூறுகின்றனர்.இந்நிலையில் தான் ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
''கிஷன்கங்கா மற்றும் ரட்லே ஹைட்ரோ திட்டங்கள் தொடர்பாக நீடித்த சர்ச்சை,தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தாக்கமும் மறுபரிசீலனை கோருவதற்கான காரணங்களில் ஒன்று,' என இந்தியா குறிப்பிட்டுள்ளது.இந்தியாவுக்கு சர்வதேச அரங்கிலும், எல்லையிலும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வருவதற்காக இந்தியா கையில் எடுத்துள்ள பிரம்மாஸ்திரம் இது என்று கருதப்படுகிறது.