உயர் பதவிக்கு பிராமணர்கள் வரணும்: சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் விருப்பம்
உயர் பதவிக்கு பிராமணர்கள் வரணும்: சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் விருப்பம்
ADDED : செப் 30, 2024 12:23 AM

பெங்களூரு : ''உயர் பதவிகளுக்கு பிராமணர்கள் வந்தால், சமூகத்திற்கு நல்லது,'' என்று, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியம் சார்பில், பெங்களூரில் நேற்று விஸ்வாமித்ர பிரதிபா புரஸ்கார் - 2024 நிகழ்ச்சி நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த, அதிக மதிப்பெண்கள் எடுத்த பிராமண சமூக மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
கடின களம்
இதில், தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:
பிராமண சமூகத்தினர் டாக்டர், இன்ஜினியர் பணிகளுக்கு மட்டும் இல்லாமல், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட இந்திய குடிமை பணிகளுக்கும் அதிகம் வர வேண்டும்.
உயர் பதவிகளுக்கு பிராமணர்கள் வந்தால், அனைத்து சமூகத்திற்கும், பிராமண சமூகத்திற்கும் நல்லது. பிராமணர்கள் அரசியலுக்கு வர கூடாது என்றும் சொல்லவில்லை.
கடினமான களம் என்பதால், அரசியலுக்கு வரும் முன் யோசனை செய்யுங்கள். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த, அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கர்நாடக நிர்வாக சீர்திருத்த ஆணைய தலைவரும், காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.,வுமான தேஷ்பாண்டே பேசியதாவது:
எனக்காக ஓட்டு
எனது ஹலியால் தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் 2,000 பேர் மட்டுமே பிராமணர்கள். சிலர் எனக்காக ஓட்டு போடுகின்றனர்.
பெரும்பாலான பிராமணர்கள் எந்த கட்சியை ஆதரிப்பர் என்று, அனைவருக்கும் தெரியும். நேர்மை, அர்ப்பணிப்புடன் பணியாற்றியதால் என்னால் 9 முறை எம்.எல்.ஏ., ஆக முடிந்தது.
ஏழை பிராமண விதவையர் யாரிடமும் உதவி கேட்க கூடாது. விதவையருக்கு உதவும் வகையில், பிராமண மேம்பாட்டு வாரியம் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கர்நாடக பிராமணர் மேம்பாட்டு வாரிய தலைவர் அசகோடு ஜெயசிம்ஹா, காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஸ்வாஸ் வைத்யா, கர்நாடக பிராமண மகாசபை தலைவர் அசோக் ஹரனஹள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.