ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா 'சஸ்பெண்ட்!' குமாரசாமி அதிரடி
ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா 'சஸ்பெண்ட்!' குமாரசாமி அதிரடி
ADDED : மே 01, 2024 08:24 AM

ஹூப்பள்ளி : ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய, ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். ஹூப்பள்ளியில் நடந்த ம.ஜ.த., உயர்மட்ட குழு கூட்டத்தில், கட்சியின் தலைவர் குமாரசாமி இந்த அதிரடி முடிவை அறிவித்தார். ஆபாச வீடியோ பென்டிரைவை, பா.ஜ., பிரமுகரான வக்கீல் தேவராஜ் கவுடாவிடம் கொடுத்ததாக, பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் 'பகீர்' தகவல் வெளியிட்டு உள்ளார்.
ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். சில பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருப்பதாக கூறப்படும், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழுவை கர்நாடக அரசு நியமித்துள்ளது.
விசாரணை அதிகாரியாக சி.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி., பிரிஜேஷ்குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமன் பன்னேகர், சீமா லட்கர் மேற்பார்வையில் விசாரணை நடக்கிறது. இந்த குழுவில் எஸ்.பி., உட்பட 18 போலீசார் இடம் பெற்று உள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களிடம் நேற்று முன்தினம், சீமா லட்கர் விசாரணை நடத்தி தகவல் பெற்று கொண்டார். இதற்கிடையில் பிரஜ்வல் ரேவண்ணா, ஜெர்மனி சென்று விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது.
நிரந்தரமாக நீக்கம்
பா.ஜ., கூட்டணியில் ம.ஜ.த., இருப்பதால், பிரஜ்வல் வழக்கில் பா.ஜ., தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆபாச வீடியோ வழக்கு எதிரொலியாக, பிரஜ்வலை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் சரணகவுடா கந்தகூர், சம்ருத்தி மஞ்சுநாத் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், ஹூப்பள்ளியில் நேற்று நடந்த ம.ஜத., உயர்மட்ட குழு கூட்டத்தில், பிரஜ்வலை கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்வதாக கட்சியின் மாநில தலைவரும், பிரஜ்வலின் சித்தப்பாவுமான குமாரசாமி அறிவித்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியதால், பிரஜ்வலை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உள்ளோம். இதற்கான உத்தரவில் கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா கையெழுத்திட்டு உள்ளார். இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழு விசாரிக்கிறது. விசாரணை அறிக்கை வரும் வரை சஸ்பெண்ட் உத்தரவு தொடரும். அறிக்கையில், அவர் தவறு செய்து இருப்பதாக தெரியவந்தால், கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்.
மோடி உதவி
கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, இப்போது வெளிவந்தது ஏன். இத்தனை ஆண்டுகளாக ஏன் யாரும் புகார் செய்யவில்லை. பா.ஜ.,வுடனான எங்கள் கூட்டணியை பொறுத்து கொள்ள முடியாமல், மாபெரும் தலைவரான துணை முதல்வர் சிவகுமார் சதி செய்கிறார். பெண்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
காங்கிரசுக்கு பெண்களை மதிக்க தெரிந்தது இவ்வளவு தான். பெண்கள் மீது காங்கிரஸ் தலைவர்களுக்கு மதிப்பு இருந்தால், வீடியோ வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கட்டும்.
இந்த வழக்கில், முதல்வர் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார் என்று தெரியவில்லை. முதல்வரின் மகன் ராகேஷ் வெளிநாட்டில் இறந்த போது, அவரது உடலை கொண்டு வர, பிரதமர் மோடி, மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் உதவி செய்தனர். அந்த நன்றியை மறந்து இப்போது பேசுகிறார். உங்கள் குடும்பத்தில் என்ன நடந்தது என்பதை, நேரம் வரும்போது பேசுகிறேன்.
பிரஜ்வல் தவறு செய்தால் அவருக்கு தண்டனை கிடைக்கட்டும். பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் தற்கொலை செய்து கொண்டால், மாநில அரசு தான் பொறுப்பு. வீடியோ, புகைப்படத்தை வெளியிடாமல் இருக்க, நீதிமன்றத்தில் இருந்து பிரஜ்வல் தடை வாங்கி வந்தது பற்றி எனக்கு தெரியாது.
எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக இல்லை. எனது அப்பா, அம்மா, என் மனைவி, மகன், மருமகள், பேரக் குழந்தை என நாங்கள் தனியாக இருக்கிறோம். ரேவண்ணா அவரது குடும்பத்துடன் ஹாசனில் இருக்கிறார். குறிப்பிட்ட வயது வரைக்கும் தான் பிள்ளைகளை நமது கைக்குள் வைக்க வேண்டும். அதன்பின் பிள்ளைகள் சுதந்திரமாக இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
குமாரசாமி குற்றச்சாட்டு குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கை, சிறப்பு விசாரணை குழுவுக்கு ஒப்படைத்து உள்ளோம். விசாரணை நடக்கிறது. இதுபற்றி இதற்கு மேல் பேச மாட்டேன். என் மகன் ராகேஷ் இறந்தது வெளிநாட்டில். அவரது உடலை கொண்டு வர உதவும்படி, பிரதமர் மோடியிடம் நான் பேசவே இல்லை. அவரிடம் நான் பேசியதாக, குமாரசாமி கூறி இருப்பது பொய்,'' என்றார்.
எனது மகன்
துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:
எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா பற்றி, ஹொளேநரசிபுராவை சேர்ந்த பா.ஜ., பிரமுகரான வக்கீல் தேவராஜ் கவுடா என்பவர், மாநில பா.ஜ., தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார். ஆனால், அதை பா.ஜ., பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இந்த வழக்கில் பா.ஜ.,வின் பதில் என்ன என்று கேட்கிறோம். வீடியோ வெளியானதில் எனது பங்கு இருப்பதாக குமாரசாமி கூறுகிறார். இதில் எனக்கு என்ன சம்பந்தமும் இல்லை.
இந்த வீடியோக்கள் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்று, ரேவண்ணாவே கூறி உள்ளார். உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று குமாரசாமி கூறினார். தேர்தல் பிரசாரத்தின் போது பிரஜ்வலை பக்கத்தில் நிற்க வைத்து, எனது மகன் என்று குமாரசாமி கூறினார். இப்போது எனது குடும்பம் வேறு, ரேவண்ணா குடும்பம் வேறு என்று கூறி தப்பிக்க பார்க்கிறார். மக்கள் முட்டாள்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சித்ரவதை செய்தனர்
இதற்கிடையில் பா.ஜ.,வை சேர்ந்த வக்கீல் தேவராஜ் கவுடா கூறுகையில், ''பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக், ரேவண்ணா குடும்பத்தால் தனக்கு அநீதி நடந்ததாக என்னிடம் கூறினார். பிரஜ்வலின் பென்டிரைவ் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். அந்த பென்டிரைவில் இருந்த வீடியோக்களை, எனது பென்டிரைவில் ஏற்றினேன். ஆனால் வீடியோவை நான் வெளியிடவில்லை.
''அந்த பென்டிரைவ் காங்கிரஸ் தலைவர்கள் கையில் சிக்கியது. துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷ் கைக்கு பிரஜ்வல் வீடியோக்கள் சென்று விட்டது. கடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஷ் படேலுக்காக கார்த்திக் வேலை செய்தார். நான் வீடியோ, புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்று நினைத்தால், சட்டசபை தேர்தலின் போதே வெளியிட்டு இருப்பேன்'' என்றார்.
ஆனால் தேவராஜ் கவுடா கூறியதை, பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் மறுத்து உள்ளார். நேற்று மதியம் அவர் வெளியிட்ட வீடியோவில் பேசி இருப்பதாவது:
ரேவண்ணா, பிரஜ்வலுக்கு கார் டிரைவராக இருந்து உள்ளேன். நான் வாங்கிய நிலத்தை ரேவண்ணா குடும்பத்தினர் அபகரிக்க பார்த்தனர். நிலத்தை கொடுக்க மறுத்ததால், என் மனைவியை கடத்தி தாக்கினர். என்னை சித்ரவதை செய்து, நிலத்தை பறித்தனர்.
ரேவண்ணா குடும்பத்திற்கு எதிராக பேசும் வக்கீல் தேவராஜ் கவுடாவிடம் சென்று, எனக்கு நியாயம் கிடைக்க உதவுங்கள் என்று கேட்டேன். என்னிடம் ஆபாச வீடியோ அடங்கிய பென்டிரைவ் இருப்பது தெரிந்ததால், அதில் இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட, நீதிமன்றத்தில் பிரஜ்வல் தடை வாங்கினார்.
பென்டிரைவில் இருந்த வீடியோக்கள், புகைப்படங்களை தேவராஜ் கவுடாவிடம் காட்டினேன். அவரது பென்டிரைவிற்கு மாற்றி கொண்டார். அவர் தான் இப்போது வீடியோ, புகைப்படங்களை வெளிவிட்டாரா என்று தெரியவில்லை. அவரை தவிர நான் யாரிடமும் வீடியோ, புகைப்படங்கள் கொடுக்கவில்லை. நான் காங்கிரஸ் தலைவர்களிடம் கொடுத்ததாக, தேவராஜ் கவுடா பொய் சொல்கிறார். சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராகி விளக்கம் அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
ம.ஜ.த., - காங்., தொண்டர்கள் மோதல்
ஹூப்பள்ளியில் நடந்த கட்சி கூட்டம் முடிந்த பின்னர், தனியார் ஹோட்டலில் குமாரசாமி தங்கி இருந்தார். அந்த ஹோட்டல் முன்பு கூடிய காங்கிரஸ் தொண்டர்கள், பிரஜ்வல், குமாரசாமி, தேவகவுடாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்த ஹூப்பள்ளி ம.ஜ.த., தொண்டர்கள் அங்கு வந்தனர்.
அவர்கள், துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால், இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் மோதலாக மாறியது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இரு கட்சி தொண்டர்களையும் சமாதானப்படுத்தினர். அங்கு வந்த போலீஸ் கமிஷனர் ரேணுகா சுகுமார், இரு கட்சி பிரமுகர்களிடமும் பேச்சு நடத்தி, அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
போலீசார் சம்மன்
'ஆபாச வீடியோ வழக்கு பற்றிய தகவல் வெளியானதும், பிரஜ்வல் ஜெர்மனி தப்பி சென்றதாக, காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. ஆனால் பிரஜ்வல் ஓடி ஒளியவில்லை. விசாரணைக்கு ஆஜர் ஆவார்' என்று, ரேவண்ணா கூறி இருந்தார். இந்நிலையில், ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில் பதிவான பாலியல் வழக்கு தொடர்பாக, ரேவண்ணா, பிரஜ்வலுக்கு 24 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக சிறப்பு விசாரணை குழு சம்மன் அனுப்பி உள்ளது.