இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில் மாடல் அழகி புகைப்படம்: ஹரியானாவில் அதிர்ச்சி
இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில் மாடல் அழகி புகைப்படம்: ஹரியானாவில் அதிர்ச்சி
UPDATED : நவ 06, 2025 10:08 PM
ADDED : நவ 06, 2025 09:59 PM

புதுடில்லி: ஹரியானாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பெண் ஒருவரின் பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் உள்ளதுடன், அவருக்கு பதில் பிரேசில் மாடல் அழகியின் படமும் உள்ளது தெரியவந்துள்ளது.
டில்லியில் நேற்று நிருபர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி ராகுல், ஓட்டுத் திருட்டு என்ற குற்றச்சாட்டை மீண்டும் எழுப்பினார். அதில், ஹரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டுள்ளன.ஹரியானாவில் உள்ள ராய் ஓட்டுச்சாவடியில் ஒரு போலி வாக்காளர் 22 முறை ஓட்டளித்துள்ளார். இத்தனைக்கும் அவர் இந்தியர் கூட அல்ல.பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் லாரிசாவின் பெயரில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது எனக்குற்றம்சாட்டியிருந்தார். இதனை தேர்தல் கமிஷன் மறுத்து இருந்தது.
இந்நிலையில், பிரேசில் மாடல் அழகியின் புகைப்படத்துடன் இன்னொரு பெண் வாக்காளர் பெயரும் வாக்காளர் பட்டியலில் உள்ளது தெரியவந்துள்ளது. குனியா என்ற பெண் வாக்காளர் தான் பிரேசில் மாடல் அழகியின் புகைப்படத்துடன் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்த குனியா கடந்த 2022 ம் ஆண்டு மார்ச் மாதம் காலமாகிவிட்டார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். அவரது பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமல் இருப்பதும், அதுவும் வெளிநாட்டு பெண் புகைப்படத்துடன் இருப்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது தங்களுக்கு வேதனையை அளிக்கிறது. அவர் இறப்பதற்கு முன்னர் ஓட்டுப் போட்டுள்ளார். ஆனால், புகைப்படம் எப்படி தவறாக உள்ளது எனத் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
என்ன சொல்கிறார் பிரேசில் மாடல்
இதனிடையே பிரேசில் மாடல் அழகி மேத்யூஸ் பெரேரோ குறித்து ராகுல் குறிப்பிட்டதும், இந்தியாவை சேர்ந்த நெட்டிசன்கள் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் அவரை தேடி பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். இதனால், அவருக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது குறித்து லாரிசா கூறுகையில், இந்திய அரசியலில் எனக்கு தொடர்பு இல்லை. நான் இதுவரை இந்தியாவுக்கு வந்தது கிடையாது. எனது போட்டோ ஆன்லைனில் இருந்து எனக்கு தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளது. நான் இந்திய மக்களை நேசிக்கிறேன். என்னை பின் தொடர்பவர்களை வரவேற்கிறேன். எனக்கு அவர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். அந்தப் பட்டியலில் இருப்பது நான் இல்லை. அது பழைய போட்டோ. இந்தியர்கள் எனது படங்களை பார்த்துவிட்டு காட்டும் அன்பை பாராட்டுகிறேன். இந்திய மீடியாக்கள் வெளியிட்ட செய்தியை பகிர்கின்றனர். அவற்றை மொழிபெயர்த்து அனுப்புகின்றனர். எனக்கு உங்களின் மொழி புரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கவனம் பெற்ற பாலிவுட் நடிகரின் காதலி
ராகுல் குறிப்பிட்டது பிரேசிலை சேர்ந்த லாரிசா என்ற அழகு நிலைய ஊழியர். முன்னாள் மாடலான இவர், இந்தியாவுக்கே வந்தது கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், நெட்டிசன்கள் பலர் தவறுதலாக பாலிவுட் நடிகர் ஆர்யனின் காதலி என கருதப்படும் லாரிசா போனேசியின் பெயர் தான் வாக்காளர் பட்டியலில் இருந்தது என தவறாக நினைத்து கொண்டனர். உடனடியாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் பதிவிட ஆரம்பித்தனர்.
ராகுல் புகைப்படத்துடன் அவர் தெரிவித்த கருத்துகளையும் அனுப்பி வருகின்றனர். ஆனால், லாரிசா போனேசி இதுவரை அந்த கருத்துகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

