அரசு சேவை பெறுவதற்கு லஞ்சம்: 68 சதவீத நிறுவனங்கள் ஒப்புதல்
அரசு சேவை பெறுவதற்கு லஞ்சம்: 68 சதவீத நிறுவனங்கள் ஒப்புதல்
ADDED : டிச 09, 2024 05:53 AM

புதுடில்லி: அரசு சேவைகள் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக, 68 சதவீத தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
'லோக்கல் சர்க்கிள்' எனப்படும் சமூக வலைதள அமைப்பு, அரசு பணிகள் பெறுவதற்காக தொழில் நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக, 159 மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு நிறுவனங்களுக்கு சப்ளை செய்வதற்கான தகுதி பெறுவது, ஒப்பந்தம் கோருவது, ஒப்பந்தம் பெறுவது, பணிக்கான தொகையை பெறுவது போன்றவற்றுக்கு, கடந்த ஓராண்டில் லஞ்சம் கொடுத்ததாக 68 சதவீத நிறுவனங்கள் கூறியுள்ளன. கொடுக்கப்பட்ட மொத்த லஞ்சத்தில் 75 சதவீதம், சட்டம், உணவு, சுகாதாரம், மருந்து போன்ற துறைகளுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது.
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, மாசு கட்டுப்பாடு வாரியம், மாநகராட்சிகள், மின்சாரத் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். நாடு முழுதும், 18,000 நிறுவனங்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றில், 54 சதவீதம் பேர், கட்டாயப்படுத்தி லஞ்சம் வாங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், 46 சதவீதம் பேர், நடைமுறைகள் வேகமாக நடப்பதற்காக தாமாக லஞ்சம் கொடுத்ததாகக் கூறிஉள்ளனர்.
'அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான், வேலை சுலபமாகவும், வேகமாகவும் நடக்கும். லஞ்சம் வாங்குவது ஒரு நடைமுறையாக மாறியுள்ளது' என, பெரும்பாலான நிறுவனங்கள் கூறியுள்ளன. லஞ்சம் கொடுக்காமல் அரசின் சேவைகளை பெற்றுள்ளதாக 16 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில், 19 சதவீதம் பேர், லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர்.
அரசு துறைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, 'இ - மார்க்கெட்' எனப்படும் ஆன்லைன் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்து. இது, லஞ்சத்தைக் குறைத்துள்ளது. ஆனாலும், சப்ளை செய்வதற்கான தகுதி பெறுவது, ஒப்பந்தம் பெறுவது, பணிக்கான தொகையை பெறுவது போன்றவற்றில் லஞ்சம் குறையவில்லை.
டிஜிட்டல் மயமாக்கம், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலும், லஞ்சம் வாங்கும் நடைமுறை மாறவில்லை. கதவுக்குப் பின்னால் லஞ்சம் வாங்குகின்றனர். லஞ்சம் குறையவில்லை என்றாலும், முன்னர் இருந்ததைவிட, கடந்த 12 மாதங்களில் லஞ்சம் கொடுக்கும் காலம் மற்றும் தொகை அளவு குறைந்துள்ளதாக தொழில் நிறுவனங்கள் கூறியுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.