பிரிக்ஸ் பிரகடனத்தில் பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் கண்டனம்
பிரிக்ஸ் பிரகடனத்தில் பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் கண்டனம்
ADDED : செப் 12, 2026 09:14 PM
புதுடில்லி: பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் கண்டிப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் பிரிக்ஸ் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதை உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒருமனதாக ஏற்றன.
இந்தியா தலைமையில் நடந்த 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் 2026ம் ஆண்டுக்கான டில்லி பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சர்வதேச அமைப்புகளான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட நிர்வாகத்தில் வளரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், உலக அமைதி மற்றும் பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், வேளாண்மை மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிரகடனத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
உலகளாவிய மோதல்களுக்கு பேச்சு மற்றும் துாதரக முறையில் தீர்வு காண வேண்டும். உலகளவில் நடக்கும் போர்களை நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடையற்ற மனிதாபிமான உதவிகளை உறுதி செய்ய வேண்டும்.
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் எந்தவிதமான இரட்டை நிலைப்பாடுகளும் இருக்கக் கூடாது. எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி மற்றும் பயங்கரவாதிகளுக்கு புகலிடங்கள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர், அவர்களுக்கு ஆதரவளிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நீதியின் முன் நிறுத்த வேண்டும்.
சர்வதேச அமைப்புகளின் நிர்வாகத்தில் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். உலகளாவிய முடிவெடுக்கும் அமைப்புகளில் வளரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை பொறுப்பை ஏற்கும் சீனாவுக்கு முழு ஆதரவை வழங்குகிறோம்.
இவ்வாறு பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.
