வருங்கால மாப்பிள்ளையுடன் மணமகளின் தாயார் 'எஸ்கேப்'
வருங்கால மாப்பிள்ளையுடன் மணமகளின் தாயார் 'எஸ்கேப்'
ADDED : ஏப் 10, 2025 06:19 AM

அலிகார் : உத்தர பிரதேசத்தில், திருமணத்துக்கு 10 நாட்களுக்கு முன், மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட இளைஞருடன் அவரது தாயார் ஓட்டம் பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் உள்ள மத்ராக் பகுதியைச் சேர்ந்த ஷிவானி என்பவருக்கும், ராகுல், 20, என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரும் 16ம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. உறவினர்களுக்கு பத்திரிகை வினியோகிக்கப்பட்டு, திருமணத்துக்கான நகை, பாத்திரங்களும் வாங்கப்பட்டன.
இந்நிலையில், மணமகன் ராகுல் திடீரென மாயமானார். ஷிவானியின் தாய் அனிதாவும், 40, காணாமல் போனார். விசாரணையில், இருவரும் இணைந்து ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. வீட்டைவிட்டுச் சென்றது மட்டுமின்றி திருமணத்துக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 3.5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் அனிதா அள்ளிச் சென்றார். இந்த சம்பவத்தால் மணமகள் ஷிவானியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கர்நாடகாவின் பெங்களூரில் தொழிலதிபராக உள்ள அனிதாவின் கணவர் ஜிதேந்திர குமார் கூறுகையில், ''திருமணம் நிச்சயிக்கப்பட்டது முதல் வருங்கால மாப்பிள்ளையுடன் அனிதா மணிக்கணக்கில் பேசி வந்தார். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மகளுடன் பேசாமல் தாயாருடன் பேசியதும் கவலையை ஏற்படுத்தியது. திருமணம் நல்லபடியாக முடியவேண்டும் என்பதால் அமைதியாக இருந்தேன். ஆனால், அதற்குள் இப்படியாகிவிட்டது,'' என்றார்.
மாயமான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.