பிரிஜ்பூஷன் மகன் கான்வாயில் இடம்பெற்ற கார் மோதி இருவர் பலி
பிரிஜ்பூஷன் மகன் கான்வாயில் இடம்பெற்ற கார் மோதி இருவர் பலி
UPDATED : மே 29, 2024 06:33 PM
ADDED : மே 29, 2024 05:44 PM

லக்னோ: பாஜ., எம்.பி., பிரிஜ்பூஷனின் மகனும், வேட்பாளருமான கரன் சென்ற காரின் கான்வாயில் சென்ற கார் , எதிரே வந்த டூவீலர் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உ.பி.,யின் கைசர்கஞ்ச் தொகுதி பா.ஜ., எம்.பி., பிரிஜ்பூஷன். மல்யுத்த சங்க தலைவராக இருந்தார். அப்போது, பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. டில்லியில் மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது. இந்த குற்றச்சாட்டு காரணமாக தற்போதைய லோக்சபா தேர்தலில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவரது மகன் கரன் வேட்பாளர் ஆக நிறுத்தப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், உ.பி., மாநிலம் கோண்டா மாவட்டத்தின் கர்னைல்கஞ்ச் பகுதியில் சென்று கான்வாயில் இடம்பெற்றிருந்த கரனுக்கு சொந்தமான சொகுசு கார் எதிரே வந்த டூவீலர் மீது மோதியது. இதில் 16 வயது சிறுவன் மற்றும் 24 வயது இளைஞர் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூதாட்டி ஒருவர் காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் பிரிஜ் பூஷன் சிங் குடும்பம் நடத்தும் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. போலீசார், கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்த போது கரன், அந்த காரில் இருந்தாரா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.