கையில் பேன் கொண்டு வரணும் ; ம.பி., அரசு மருத்துவமனையில் அவலம்
கையில் பேன் கொண்டு வரணும் ; ம.பி., அரசு மருத்துவமனையில் அவலம்
ADDED : செப் 30, 2024 09:56 AM

ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனையின் உள்நோயாளிகளை பேன் எடுத்து வருமாறு நெருக்கடி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜபல்பூரில் சேத் கோவிந்த் தாஸ் விக்டோரிய அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த மருத்துவமனை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
குறிப்பாக, கடந்த 20 நாட்களாக ஐ.சி.யூ.வில் ஏ.சி., பழுதடைந்துள்ளது. இதனை சரிசெய்யாமல் ஐ.சி.யூ.,வில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும், நோயாளிகளின் குடும்பத்தினரிடம், பேனை எடுத்து வருமாறு மருத்துவமனை நிர்வாகம் நெருக்கடி கொடுத்துள்ளது. நோயாளிகளும் வேறுவழியில்லாமல் பேன் கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
வடக்கு மத்திய தொகுதியின் எம்.எல்.ஏ., அபிலாஷ் பாண்டே, விக்டோரியா மருத்துவமனையில் அண்மையில் ஆய்வு நடத்தினார். அப்போது, ஐ.சி.யூ.,வில் பழுதடைந்து இருக்கும் ஏ.சி.,யை சரிசெய்து தருமாறு நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, விரைவில் சரிசெய்து தருவதாக உறுதியளித்தார்.
விக்டோரியா மருத்துவமனையில் மட்டுமல்லாது மாண்லா, திண்டோரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளிலும் இதே நிலை நிலவுவதாக மூத்த மருத்துவ மணீஷ் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
மாநில சுகாதாரத்துறை சார்பில் போதிய நிதி ஒதுக்கப்படாததே, மருத்துவமனைகளில் இதுபோன்ற அவலநிலைக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.