தேடப்படும் குற்றவாளிகளை ஒப்படைக்க திஹார் சிறையில் பிரிட்டன் குழு ஆய்வு
தேடப்படும் குற்றவாளிகளை ஒப்படைக்க திஹார் சிறையில் பிரிட்டன் குழு ஆய்வு
ADDED : செப் 07, 2025 01:09 AM
புதுடில்லி:இந்தியாவில் குற்ற வழக்குகளில் சிக்கி, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய குற்றவாளிகளை மீண்டும் இந்தியா கொண்டு வர முயற்சிகள் நடந்து வரும் நிலையில், இந்திய சிறைகள் குறித்த நிலைமைகளை மதிப்பிடுவதற்காக பிரிட்டன் குழு திஹார் சிறைக்கு சென்றது.
தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, சஞ்சய் பண்டாரி போன்றோர் மீது பல வழக்குகள் உள்ள நிலையில், இவர்கள் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்றனர். அவர்களை நாடு கடத்தி அழைத்து வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இது தொடர்பான வழக்குகள் லண்டன் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. இதன்படி, பிரிட்டனின் அரசு வழக்கறிஞர்கள் குழு, கடந்த ஜூலையில் டில்லி வந்து, திஹார் சிறையில் உள்ள வசதிகளை பார்வையிட்டனர்.
நான்கு பேர் கொண்ட அக்குழுவில், பிரிட்டன் அரசு வழக்கறிஞர் சேவை குழுவைச் சேர்ந்த இருவரும், பிரிட்டிஷ் உயர் ஆணைய அதிகாரிகள் இருவரும் இடம்பெற்றிருந்தாக கூறப்படுகிறது-.
இந்தக் குழுவினர், திஹார் சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு வார்டையும், கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பையும் மதிப்பீடு செய்துள்ளனர்.
மேலும், அங்கிருந்த சில கைதிகளுடன் பேசி, நிலைமைகள் குறித்து கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தகவல்கள், பிரிட்டன் நீதிமன்றத்தில், இந்தக் குழுவினரால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திஹார் சிறை வசதிகள் குறித்து இந்தக் குழுவினர் திருப்தி தெரிவித்து உள்ளனர்.
தேவைப்பட்டால் உயர் பதவியில் உள்ள நாடு கடத்தப்படுபவர்களுக்கு தனி இடம் உருவாக்கப்படும் என, மத்திய அரசு உறுதி அளித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.