ADDED : நவ 28, 2024 02:59 AM

மூணாறு:மூணாறில், நியூ நகரில் மதுபோதையில் தம்பியை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
அப்பகுதியில் வசித்த வேளாங்கண்ணி இறந்து விட்ட நிலையில் அவரது மகன்கள் விக்னேஷ் 27, சூர்யா 24, தாயாருடன் வசித்தனர். சூர்யா நவ., 25ல் வீட்டினுள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மூணாறு போலீசார் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த நிலையில், சூரியாவின் உடலில் பலத்த காயங்கள் இருந்தன. அதனால் சூர்யா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
கோட்டயம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில் கொலை என உறுதியானது.
மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா, எஸ்.ஐ. அஜேஷ் கே. ஜான் ஆகியோர் சூர்யாவின் சகோதரர் விக்னேஷை கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: கட்டுமான தொழிலாளர்களான விக்னேஷ், சூர்யா மது அருந்தி விட்டு போதையில் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டனர். நவ.,25 இரவில் தகராறு ஏற்பட்டது. விக்னேஷ் இரவு 9:00 மணிக்கு தாயாரை அருகில் வசிக்கும் சகோதரியின் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு சூர்யாவை பலமாக தாக்கியதுடன், துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்தார், என்றனர். கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பதை குறித்து விசாரிக்க விக்னேஷை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.