திருமணத்துக்கு மறுத்த அண்ணி: துண்டு துண்டாக வெட்டிய மைத்துனர்
திருமணத்துக்கு மறுத்த அண்ணி: துண்டு துண்டாக வெட்டிய மைத்துனர்
ADDED : டிச 15, 2024 11:41 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், அண்ணனை பிரிந்து தனியாக வாழும் அண்ணி, தன்னை திருமணம் செய்ய மறுத்ததால், ஆத்திரமடைந்த மைத்துனர், அவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தார்.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டா அருகில் உள்ள டோலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் அதியுர் ரஹ்மான் லஷ்கர், 35; கட்டட தொழிலாளி.
இவரது அண்ணனுக்கு திருமணமான நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன் அவரை, அவரது மனைவி பிரிந்தார். இவர், டோலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார்.
இவரிடம், கணவரின் தம்பி அதியுர் ரஹ்மான் லஷ்கர் பல முறை தகாத முறையில் அத்துமீறினார். மேலும், தன்னை திருமணம் செய்யும்படி, அண்ணியை அவர் வற்புறுத்தினார்.
அதிருப்தி அடைந்த அந்த பெண், அதியுர் ரஹ்மான் லஷ்கரிடம் பேசுவதை நிறுத்தினார். அவரது மொபைல் போன் எண்ணையும், 'பிளாக்' செய்தார். இதனால் கடுப்பான அதியுர் ரஹ்மான் லஷ்கர், கட்டுமானம் நடக்கும் கட்டடத்துக்கு, சமீபத்தில் அண்ணியை அழைத்துச் சென்றார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த அதியுர் ரஹ்மான் லஷ்கர், கழுத்தை நெரித்து அண்ணியை கொலை செய்தார்.
பின், அவரது தலையை துண்டித்த அவர், உடலை இரு பாகங்களாக வெட்டினார். தலை மற்றும் உடலின் பாகங்களை வெவ்வேறு இடங்களில் வீசி, அவர் தலைமறைவானார்.
டோலிகஞ்ச் பகுதியின் கிரஹாம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் மனித தலை இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணையை துவங்கினர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் டைமண்டு ஹார்பர் என்ற பகுதியில் பதுங்கியிருந்த அதியுர் ரஹ்மான் லஷ்கரிடம், போலீசார் நேற்று விசாரித்தனர்.
குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

