ADDED : டிச 05, 2024 07:35 AM

பெலகாவி: பெலகாவி மாவட்டம், முதலகியின் கல்லோலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மன்மந்த கோபால் தல்வார், 35. இவரது சகோதரர் பசவராஜ் தல்வார், 30.
திருமணமாகாத மன்மந்த கோபால் தல்வார், தன் பெயரில் 50 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்திருந்தார். இதற்கு வாரிசாக தனது சகோதரர் பசவராஜ் தல்வார் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.
இதையறிந்த, பசவராஜ் தல்வார், அந்த பணத்தை குறுக்குவழியில் அடைய முடிவு செய்தார்.
இதற்காக, தனது நண்பர்களுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். அக்., 7ம் தேதி மன்மந்த கோபால் தல்வார், பசவராஜ் தல்வார், அவரது நண்பர்கள் பாபு ஷேக், எரப்பா ஹடகினாலா, சச்சின் காண்டென்னவர் ஆகியோர் மது குடித்தனர்.
பின், கரும்பு தோட்டத்திற்கு சென்றபோது, மன்மந்த கோபால் தல்வார் தலையில் இரும்புக் கம்பியால் பலமாக அடித்தனர். படுகாயமடைந்த அவர், உயிரிழந்தார். பின், பசவராஜ், அவரது நண்பர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
மன்மந்த கோபால் தல்வார் கொலை தொடர்பாக கட்டபிரபா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், அவரது சகோதரர் பசவராஜ் தல்வார், அவரது நண்பர்கள் அனைவரும் தலைமறைவாகினர். திடீரென தலைமறைவானதால், போலீசாருக்கு இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் மொபைல் போன் சிக்னலை வைத்து, போலீசார் கைது செய்தனர்.
பசவராஜ் தல்வாரிடம் நடத்திய விசாரணையில், இன்சூரன்ஸ் பணத்துக்காக மன்மந்தகோபால் தல்வாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.