ADDED : ஜன 18, 2024 04:56 AM

வேலைபளு, குடும்பம், குடும்ப பிரச்னை என பல பிரச்னைகளால், மனஉளைச்சலில் இருப்பவர்கள் எங்காவது, சுற்றுலா சென்று வரலாம் என்று நினைப்பது உண்டு. அதிலும் குறிப்பாக நீர்வீழ்ச்சி பகுதிகளுக்கு சென்று, ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளிக்க வேண்டும் என்று விரும்புவர்.
இத்தகையவர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது புருடே நீர்வீழ்ச்சி. கடலோர மாவட்டமான, உத்தர கன்னடாவின் சித்தாபூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புருடே நீர்வீழ்ச்சி. இல்லிமனே ஆற்றின் குறுக்கே இருப்பதால், இல்லிமனே நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. 90 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பறவைகள்
துாரத்தில் இருந்து பார்க்கும் போது, நீர்வீழ்ச்சியை பார்க்க அழகாக இருக்கும். ஆனால் அந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதில் ஆபத்தும் இருப்பதாக, அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து, செங்குத்தான பாதையில் இறங்கி, நீர்வீழ்ச்சிக்கு நடந்து செல்ல வேண்டும்.
சில இடங்களில் படிக்கட்டுகள் இருக்கும். ஆனால் பெரும்பாலான இடங்களில் படிக்கட்டுகளோ, பிடிப்பதற்கு பிடிமானமோ கிடையாது. பாறைகள், கற்களை பிடித்து கவனமாக இறங்கி செல்ல வேண்டும். அலட்சியமாக இருந்தால், வழுக்கி விழ வேண்டியது தான்.
நீர்வீழ்ச்சி கொட்டும் இடத்தில் குளிக்க முடியாது. அங்கிருந்து தண்ணீர் ஓடி வரும் இடத்தில், குளிக்க அனுமதி இருக்கிறது. அங்கும் கவனமாக குளிக்க வேண்டும். நீர்வீழ்ச்சி அருகே உள்ள பாறைகளில் அமர்ந்து, புகைப்படம் எடுத்து கொள்ளலாம். மைனா, மரங்கொத்தி பறவை உள்ளிட்ட பறவைகளையும், காட்டுகோழிகளையும் கண்டு ரசிக்கலாம்.
எப்போது செல்லலாம்?
சித்தாபூரில் இருந்து 20 கிலோ மீட்டரும், வனப்பகுதி சாலையில் தான் செல்ல வேண்டும். சாலையின் இருபுறமும் பச்சைபசலென இருக்கும் என்பதால், மனதுக்கு புத்துணர்வு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அழகும், ஆபத்தும் நிறைந்த நீர்வீழ்ச்சிக்கு, குடும்பத்தினரிடன் பாதுகாப்பாக சென்று வந்தால், மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அக்டோபர் முதல் ஜனவரி வரை நீர்வீழ்ச்சிக்கு செல்ல உகந்த காலம்.
மழைக்காலங்களில் பாறைகள் வழுக்கும் என்பதால், இங்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. பெங்களூரில் இருந்து புருடே நீர்வீழ்ச்சி 420 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. மங்களூரு விமான நிலையத்தில் இருந்து 228 கிலோ மீட்டர், துாரத்தில் இருக்கிறது.
பெங்களூரில் இருந்து பஸ்சில் சென்றால், சிர்சி அல்லது சித்தாபூர் சென்று அங்கிருந்து செல்லலாம். சிர்சி, சித்தாபூரில் ரயில் நிலையம் இல்லாததால், ஷிவமொகா தாளகுப்பா, உத்தர கன்னடாவின் குமட்டா, அங்கோலா, கோகர்ணா, ஹொன்னாவர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு சென்று, அங்கிருந்து நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம்.- நமது நிருபர் -