மிருகத்தனமான சம்பவம்: மே.வங்க கவர்னர் கடும் கண்டனம்
மிருகத்தனமான சம்பவம்: மே.வங்க கவர்னர் கடும் கண்டனம்
ADDED : ஏப் 19, 2025 08:01 PM

கோல்கட்டா: 'முர்ஷிதாபாத் சம்பவம், மிருகத்தனமான சம்பவம்,' என்று மேற்குவங்க கவர்னர் சி.வி.அனந்த போஸ் கூறினார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, வக்ப் திருத்த சட்டத்துக்கு எதிராக சமீபத்தில் போராட்டங்கள் நடந்தன.
முர்ஷிதாபாத், மால்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின. இதில், மூன்று பேர் கொல்லப்பட்டனர்.வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை, 270க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம் மாநில கவர்னர் அனந்த போஸ், இரண்டு நாட்களாக பயணம் செய்து ஆய்வு நடத்தினார். நேற்று மால்டா சென்றிருந்த நிலையில், இன்று முர்ஷிதாபாத்திற்கு சென்றார்.
முர்ஷிதாபாத்தின் சம்ஷெர்கஞ்ச், துலியன், சுதி மற்றும் ஜாங்கிபூர் ஆகிய இடங்களுக்குச் சென்று, கலவர சேதங்களை நேரில் பார்த்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
இது மிருகத்தனமான சம்பவம். தேர்தல்களின் போது வன்முறை நடந்தது, ஆனால் இப்போது அது அடிக்கடி நடக்கிறது. ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது படையெடுக்க முயற்சிக்கின்றனர். மக்கள் அமைப்பின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்,
சமூக ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இது விளங்குகிறது. அரசியல் கட்சிகள் இதை தங்கள் வாக்குகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றன. மனித உரிமை அமைப்புகள் விசாரணை கோரியுள்ளன.
எனது அறிக்கையை மத்திய அரசு மற்றும் மாநில அரசுடன் பகிர்ந்து கொள்வேன். அவற்றை தற்போது பொதுவில் பகிர்ந்து கொள்ள முடியாது.
இவ்வாறு அனந்த போஸ் கூறினார்

