பாகிஸ்தான் எல்லையில் விவசாயி மாயம் கால் தடத்தை கண்டுபிடித்தது பி.எஸ்.எப்.,
பாகிஸ்தான் எல்லையில் விவசாயி மாயம் கால் தடத்தை கண்டுபிடித்தது பி.எஸ்.எப்.,
ADDED : ஜூன் 28, 2025 08:28 PM
பாசில்கா:பாகிஸ்தான் எல்லையில் காணாமல் போன விவசாயி கால் தடத்தை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். தவறுதலாக எல்லையைக் கடந்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கிக்கப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம், கைரேகே உத்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்ரித்பால் சிங். இவருக்கு, ராணா புறக்காவல் நிலையம் அருகே, பாகிஸ்தான் முள்வேலிக்கு அருகில் விவசாய நிலம் உள்ளது.
கடந்த, 21ம் தேதி தன் நிலத்துக்கு வந்தபோது அம்ரித்பால் சிங்கை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் பார்த்தனர். அன்று மாலை, 5:00 மணிக்கு பிறகும் சிங் வீடு திரும்பவில்லை.
எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்தபோது, பாகிஸ்தான் எல்லைக்குள் மனித கால் தடங்களைக் கண்டுபிடித்தனர். அம்ரித்பால் சிங், தவறுதலாக எல்லையைக் கடந்து பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு, அமிர்காஸ் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, எல்லைப் பாதுகாப்புப் படை பரிந்துரை செய்துள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் கொடி சந்திப்பு நடத்தப்பட்டு, அம்ரித்பால் சிங் குறித்து விசாரித்தனர்.
ஆனால், யாரும் தங்கள் எல்லைக்குள் வரவில்லை என பாக்., படையினர் கூறி விட்டனர். மூன்று மாத மகள்களின் தந்தையான அம்ரித்பால் சிங்குக்கு, பாக்., எல்லை அருகே 8.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
கோடைக் காலத்தில், காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை எல்லைப் பாதுகாப்புப் படை கண்காணிப்பில் முள் வேலிக்கும் சர்வதேச எல்லைக்கும் இடையிலான நிலத்துக்குச் செல்ல நம் நாட்டு விவசாயிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பாசில்கா, பெரோஸ்பூர், குர்தாஸ்பூர், பதான்கோட், அமிர்தசரஸ் மற்றும் தரன் தரன் உள்ளிட்ட எல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பலருக்கு, 'பூஜ்யக் கோடு' என அழைக்கப்படும் இந்தப் பகுதியில் விவசாய நிலம் உள்ளது.
பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யுமான அவினாஷ் ராய் கன்னா, அம்ரித்பால் சிங்கைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.